செய்திகள்
கோப்புபடம்

கரூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்

Published On 2020-10-24 11:59 GMT   |   Update On 2020-10-24 11:59 GMT
கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.
கரூர்:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. கொரோனா காரணமாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர், ஜூன் 1-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அப்போதும் கொரோனா தொற்று குறையாததால் அந்த அறிவிப்பும் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் ஜூன் 15-ந் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.

ஆனால், அப்போதும் கொரோனா தொற்றின் வேகம் குறையாததால் தேர்வை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சிகள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் வலியுறுத்தினர். பொதுத்தேர்வுகளை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதனையடுத்து தமிழக அரசு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. மேலும் 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவித்தது. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும், வருகை பதிவேடு அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் அறிவித்தது.

இந்தநிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நேற்று 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்கள் தாங்கள் கல்வி பயின்ற பள்ளிகள் வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் மூலமாகவும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுச் சென்றனர்.

மதிப்பெண் சான்றிதழ் வாங்க வந்த மாணவ-மாணவிகளும், ஆசிரிய-ஆசிரியைகளும் முககவசம் அணிந்திருந்தனர். அனைத்து பள்ளிகளிலும் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவிகள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து சான்றிதழை பெற்று சென்றனர். அப்போது மாணவ, மாணவிகள் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது நண்பர்களை பார்த்த சந்தோஷத்தில் சிரித்து பேசி மகிழ்ந்ததை காண முடிந்தது.

Tags:    

Similar News