செய்திகள்
கோப்புப்படம்

ரெயிலில் கொள்ளையடித்த ரூ.2 கோடியை எரித்தோம்- கைதான கொள்ளையர்கள் வாக்குமூலம்

Published On 2018-11-11 04:53 GMT   |   Update On 2018-11-11 04:53 GMT
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால் ரெயிலில் கொள்ளையடித்த ரூ.2 கோடியை எரித்ததாக கைதான கொள்ளையர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். #SalemTrainRobbery #TrainRobbery #Demonetisation
சென்னை:

சேலத்தில் இருந்து சென்னை வந்த எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ந்தேதி ரூ.5 கோடியே 78 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

இவை அனைத்தும் பழைய மற்றும் கிழிந்த நோட்டுகள். சேலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் இருந்து சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ரெயில் வரும் வழியில் மேற்கூரையில் துளையிட்டு அந்தப்பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்குப்பின் துப்பு துலங்கிய இந்த கொள்ளை தொடர்பாக மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த மோகர்சிங், கிருஷ்ணா, மகேஷ்பாரதி மோகன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.

இவர்களில் 5 பேரை போலீசார் நேற்று விருத்தாசலம், சின்னசேலம், ஆத்தூர், அயோத்தியாபட்டிணம், வாழப்பாடி, சேலம் ஜங்‌ஷன், செவ்வாய்ப்பேட்டை ரெயில்வே குட்ஷெட் ஆகிய இடங்களுக்கு நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது கொள்ளையர்கள் எப்படி கொள்ளையடித்தோம் என்பதை நடித்து காட்டினார்கள். அவற்றை போலீசார் வீடியோ எடுத்தனர்.

இந்த கொள்ளையில் மொத்தம் 16 பேர் சம்பந்தப்பட்டுள்ளனர். தற்போது 7 பேர் பிடிபட்டுள்ளனர். மேலும் 9 பேரை தேடிவருகிறார்கள். 16 பேரும் பல்வேறு குழுக்களாக தமிழகம் வந்து 4 மாதம் தங்கி திட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

சின்ன சேலத்தில் இருந்து விருத்தாசலம் வரை ரெயில் தண்டவாளத்தில் பாலம் அமைக்கும் பணி நடப்பதால் அந்த இடத்தில் ரெயில் மெதுவாக செல்லும் இதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் அந்த இடத்தில் ரெயில் சென்றபோது கட்டர் மூலம் துளையிட்டு பணத்தை கொள்ளையடித்துச்சென்றுள்ளது தெரிய வந்தது. 4 பேர் மட்டும் ரெயிலின் மேல் கூரையில் ஏறி துவாரம் போட்டுள்ளனர்.


கொள்ளையடிக்கப்பட்ட 5.78 கோடியை கொள்ளையர்கள் அனைவரும் சரிசமமாக பங்குபோட்டு உல்லாசமாக செலவு செய்தனர். சொந்த ஊரில் நிலம் மற்றும் சொத்துக்களையும் வாங்கியுள்ளனர். மீதம் உள்ள ரூ.2 கோடியை வங்கியில் டெபாசிட் செய்ய முடியாததாலும் செலவழிக்க முடியாமலும் பதுக்கி வைத்து இருந்தனர்.

இந்தநிலையில் 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததால் கொள்ளையர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அவற்றை கிழித்து போட்டு யாருக்கும் தெரியாமல் தீவைத்து எரித்து விட்டதாக போலீசில் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

7 கொள்ளையர்களின் 13 நாள் போலீஸ் காவல் நாளையுடன் முடிவடைவதால் நாளை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். #SalemTrainRobbery #TrainRobbery
Tags:    

Similar News