செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2021-07-26 04:21 GMT   |   Update On 2021-07-26 04:21 GMT
ஒகேனக்கல் காவிரியில் இரு கரைகளையும் தொட்டபடி வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.
மேட்டூர்:

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்திலும், கேரள மாநிலம் வயநாடு உள்பட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது.

இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி அணை முற்றிலுமாக நிரம்பி உள்ளது. கபினி அணைக்கும், கிருஷ்ணசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கபினி அணைக்கு வரும் உபரி நீர் அணையின் பாதுகாப்பு கருதி அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

2 அணைகளில் இருந்தும் மொத்தம் 36 ஆயிரத்து 533 கனஅடி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட உபரிநீர் கடந்த 24 -ந் தேதி ஒகேனக்கல்லுக்கு வந்தடைந்தது. இதனால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று காலை ஒகேனக்கலில் 30 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொது மக்கள் செல்வதை தடுக்கும் வகையில் காவிரி கரையோரப் பகுதிகளான நாகர்கோவில், முதலைப் பண்ணை, ஆலம்பாடி, ஊட்டமலை, பிரதான மெயின் அருவி செல்லும் நடைபாதை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ஆலம்பாடி சோதனைச்சாவடி, மடம் சோதனை சாவடி வழியாக வெளியூரில் இருந்து சுற்றுலாவுக்கு வரும் வாகனங்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகிறார்கள்.

ஒகேனக்கல் காவிரியில் இரு கரைகளையும் தொட்டபடி வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று காலை 19ஆயிரத்து 665 கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து 34 ஆயிரத்து 144 கன அடியாக வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரியில் டெல்டா பாசனத்திற்கு திறந்து விடப் பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீர் விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று காலை 72.5 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 75.34 அடியானது. இனிவரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக உயர வாய்ப்பு உள்ளது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News