செய்திகள்
கே.பாலகிருஷ்ணன்.

இயற்கை வளங்களை அரசு கையகப்படுத்த வேண்டும் - திருப்பூரில் இன்று கே.பாலகிருஷ்ணன் பேட்டி

Published On 2021-09-13 10:29 GMT   |   Update On 2021-09-13 10:29 GMT
திருப்பூரில் ஸ்மார்ட்சிட்டி பணிகளால் பல சாலைகள் அவல நிலையில் உள்ளது. அதனை உடனடியாக செப்பனிட வேண்டும்.
திருப்பூர்:
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  திருப்பூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
 
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மெகா தடுப்பூசி முகாமில் 28 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதற்காக தமிழக முதல்வர் மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் சி.பி.எம்., சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். 

தமிழ்நாட்டின் தேவைக்கு ஏற்ப மத்திய அரசு தடுப்பூசிகளை வழங்க வேண்டும். நீட் தேர்வு அச்சம் காரணமாக நேற்றும் ஒரு மாணவர் உயிரிழந்துள்ளார். நீட் தேர்வை எதிர்த்து சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு அதை கைவிட மறுத்து அடம்பிடிக்கிறது. மாணவர்கள் உயிரை மாய்த்து கொள்ளக்கூடாது. என்ன செய்தாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என எச்.ராஜா கூறுகிறார். 

இவர் மத்திய அரசு போல நினைத்து பேசுகிறார். தமிழ்நாட்டின் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் விதமாக பேசி வருகின்றனர். ரூ.6 லட்சத்து 70 ஆயிரம் கோடிக்கு பொதுத்துறை நிறுவனங்களை குத்தகைக்கு விடப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக பொது நிறுவனங்களை மூடுவதற்கான ஏற்பாடாகத்தான் இதை பார்க்க முடிகிறது. இதை குத்தகைக்கு விடுவதன் மூலம் கார்ப்பரேட் முதலாளி களுக்கு தான் சாதகமாக அமையும். 
 
போர்டு கார் தொழிற்சாலையை மூடுவது என்பது அதன் நிர்வாகம் மட்டுமே எடுக்கும் முடிவு கிடையாது. மத்திய அரசின் ஒப்புதலும் தேவைப்படும். தற்போது தொழிற்சாலை மூடப்படுவதால் 40 ஆயிரம் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இதில் மத்திய மாநில அரசுகள் தலையிட்டு தீர்வு காண வேண்டும். 

அகில இந்திய அளவில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 27-ந்தேதி இந்திய அளவில் பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதை தமிழக கட்சிகளும் ஆதரித்து பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெற செய்ய வேண்டும். மோடி அரசிற்கு கண்டன தெரிவிக்கும் வகையில் இயக்கம் ஆரம்பிக்கப்படும். மத்திய அரசிற்கு எதிராக வரும் 20-ந்தேதி வீடுகளில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
 
சட்டவிரோத கல்குவாரி களை மூடுவதுடன் வரும் காலத்தில் இயற்கை வளங்களை அரசாங்கமே கையகப்படுத்தி நடத்தினால் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். திருப்பூரில் ஸ்மார்ட்சிட்டி பணிகளால் பல சாலைகள் அவல நிலையில் உள்ளது. அதனை உடனடியாக செப்பனிட வேண்டும்.

திருப்பூரில் இ.எஸ்.ஐ மருத்துவமனை கட்ட வேண்டும். கடந்த ஆட்சியின் போதே அ.தி.மு.க., அரசு நீட் தேர்விற்கு விலக்கு வாங்கியிருக்க வேண்டும். ஆனால் அதை செய்ய எடப்பாடி பழனிசாமி தவறிவிட்டார். 

சட்ட மன்றத்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை திருப்பி அனுப்பினால் மீண்டும் ஒரு முறை அதே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினால் அதனை நிராகரிக்க முடியாது. அதை அ.தி.மு.க., செய்யவில்லை. தி.மு.க. அரசு நீட் தேர்வு ரத்து செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்யும். அடுத்த ஆண்டு நீட் தேர்விற்குள் தி.மு.க. அரசு விலக்கு வாங்கிவிடும் என முழு நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News