செய்திகள்
சித்தராமையா

பாஜக அரசின் மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் தீவிர போராட்டம்: சித்தராமையா

Published On 2021-01-11 02:10 GMT   |   Update On 2021-01-11 02:10 GMT
கர்நாடகத்தில் பாஜக அரசின் மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் தீவிர போராட்டம் நடத்தும் என்று சித்தராமையா கூறினார்.
பெங்களூரு :

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று, பா.ஜனதா அரசின் மோசமான சட்டங்கள் என்ற பெயரில் ஒரு கையேட்டை வெளியிட்டு நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பசுவதை தடை சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும். மாட்டிறைச்சி ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை முதலில் நிறுத்த வேண்டும். பா.ஜனதாவினர் மாட்டு சாணம் எடுக்கவில்லை. ஆனால் கோ பூஜை செய்கிறார்கள். மத்திய-மாநில பா.ஜனதா அரசுகள் மக்கள் விரோத சட்டங்களை அமலுக்கு கொண்டு வந்துள்ளன. இந்த ஆண்டு காங்கிரசுக்கு போராட்ட ஆண்டு. இந்த மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் தீவிர போராட்டம் நடத்தும்.

நாங்கள் மாநில அரசின் மக்கள் விரோத சட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்கு எதிராக தீவிர போராட்டம் நடத்துவோம். வருகிற 18-ந் தேதி கட்சியின் பல்வேறு நிகழ்வுகள் இருக்கின்றன. நாங்கள் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கிறோம். பா.ஜனதா அரசு 5 சட்டங்களை கொண்டு வந்துள்ளன. இதில் உண்மை எது, பொய் எது என்பது குறித்து நாங்கள் ஒரு கையேடு தயாரித்து இன்று (நேற்று) வெளியிட்டுள்ளோம்.

கர்நாடக அரசின் வேளாண் சந்தைகள் திருத்த சட்டம், நில சீர்திருத்த சட்ட திருத்தம், பசுவதை தடை திருத்த சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம், விவசாய விளைபொருட்கள் ஒப்பந்தம் சட்டம் ஆகியவற்றின் உண்மை தன்மை குறித்து விவரங்களை இந்த கையேட்டில் வெளியிட்டுள்ளோம். கர்நாடக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தால், வேளாண் சந்தைகள் ஒழிக்கப்பட்டுவிடும். இந்த சந்தைகளை ஒழிக்க வேண்டும் என்பது தான் பா.ஜனதாவின் நோக்கம்.

நில சீர்திருத்த திருத்த சட்டப்படி, விவசாய நிலத்தை யார் வேண்டுமானாலும் வாங்கலாம் மற்றும் யார் வேண்டுமானாலும் விவசாயம் செய்யலாம். தேவராஜ் அர்ஸ் முதல்-மந்திரியாக இருந்தபோது உழுபவனே நிலத்தின் உரிமையாளர் என்பதை உறுதி செய்ய நில சீர்திருத்த சட்டத்தை கொண்டு வந்தார். அதன் மூலம் லட்சக்கணக்கான விவசாய கூலித்தொழிலாளர்கள் நில உரிமையாளர் ஆனார்கள். கர்நாடக அரசுகொண்டு வந்துள்ள திருத்தத்தால் சிறு விவசாயிகள் பெரிய முதலாளிகளுக்கு நிலத்தை விற்றுவிட்டு, அவர்களிடம் கூலிக்கு வேலை செய்யும் நிலை உண்டாகும்.

இப்போது இருப்பவரே (பணக்காரர்) நில உரிமையாளர் என்ற நிலை வந்துள்ளது. இது மிகவும் ஆபத்தானது. விவசாய நிலம் கட்டுமான தொழிலுக்கு விற்கப்படும். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது இத்தகைய திருத்தத்தை கொண்டுவர முயற்சி செய்ததாக பா.ஜனதாவினர் தவறான பிரசாரம் செய்கிறார்கள். மிக அவசரமான சூழலில் மட்டுமே அவசர சட்டங்களை கொண்டுவர வேண்டும். ஆனால் தற்போதைய பா.ஜனதா அரசு அனைத்து விஷயங்களுக்கும் அவசர சட்டங்களை கொண்டு வருகிறது.

பசுவதை தடை சட்டத்தை இந்த அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ளது. விவசாயிகள் தங்களிடம் உள்ள வயதான மாடுகளை என்ன செய்ய வேண்டும் என்பதை பா.ஜனதாவினர் கூற வேண்டும். மாடுகளை கோசாலைகளில் விட்டால் அதை வளர்க்க ஆகும் செலவை அதன் உரிமையாளர்களே கொடுக்க வேண்டுமாம். ஒரு மாடு தினமும் 7 கிலோ தீவனத்தை திண்கிறது. அதற்கு ரூ.100 செலவாகிறது. அதை விவசாயிகள் எங்கிருந்து கொடுப்பது?.

எந்த வகை மாடாக இருந்தாலும் அவற்றுக்கு 12 ஆண்டுகளுக்கு பிறகு வயதாகிவிடுகிறது. பா.ஜனதா அரசு தரித்திர அரசு. மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்கிறவர்கள் பா.ஜனதாவினரே. பெட்ரோல்-டீசல், சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பிரதமர் மோடி பேசுவது இல்லை.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Tags:    

Similar News