ஆன்மிகம்
அன்னாபிஷேகம் செய்யப்பட்டிருந்ததையும், கோவில் முன்பு சாமி தரிசனத்துக்காக காத்திருந்தவர்களையும் படத்தில் காணலாம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்

Published On 2021-10-21 03:20 GMT   |   Update On 2021-10-21 03:20 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமியையொட்டி நடந்த அன்னாபிஷேகத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது திரளான பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
ஐப்பசி பவுர்ணமியான நேற்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடந்தது. இதனையொட்டி சாதம் வடிக்கப்பட்டு சிவனுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு காய்கனிகளால் அலங்காரம் செய்யப்படும்.

அதன்படி திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று மதியம் அன்னாபிஷேகம் நடைபெற்றது. அப்போது கோவிலில் உள்ள சிவ லிங்கங்களுக்கு மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை சாமிக்கு அன்னத்தால் அலங்காரம் நடைபெற்றது.

அந்த சமயத்தில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் ராஜகோபுரம் முன்பும், அம்மணி அம்மன் கோபுரம் முன்பும் காத்திருந்தனர்.

இதற்கிடையில் மாலை 3 மணி முதல் 4 மணி வரை திருவண்ணாமலையில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் கோபுரங்கள் முன் நனைந்தவாறு பக்தர்கள் காத்திருந்தனர். தொடர்ந்து 6 மணிக்கு பின்னர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து நீண்ட வரிசையில் நின்று அவர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News