ஆன்மிகம்
பைரவர்

விமானத்தில் வீற்றிருக்கும் ஆகாச பைரவர்

Published On 2020-12-07 08:20 GMT   |   Update On 2020-12-07 08:20 GMT
பைரவர் ஸ்ரீ விமானத்திலிருப்பதால் ஆகாச பைரவர் என்றும், எப்போதும் மகிழ்ச்சியுடன் ஊஞ்சலில் ஆடிக் கொண்டே இருப்பதால் மகா ஆனந்த பைரவர் என்றும் அழைக்கப்படுகிறார்.
சட்டநாதராக விளங்கும் பைரவ மூர்த்திக்குத் தலைமைத் தலமாக விளங்குவது சீர்காழியாகும். சிதம்பரத்திற்குத் தெற்கே தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள இவ்வூரில் பிரம்மாவால் பூசிக்கப்பட்ட பெரிய சிவாலயம் உள்ளது. இத்தலத்தில் உள்ள மலைக்கோவில் உச்சியில் தென்முகம் நோக்கி நின்ற கோலத்துடன் சட்டைநாதர் காட்சி தருகிறார். இவர் பைரவரின் அவதாரமே. பிரகாரத்தில் அஷ்ட பைரவர்களுக்கென தனிக்கோவில் உள்ளது.

சட்டைநாதர் அத்திமரத்தால் அமைந்த திருமேனி ஆதலால் இதற்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. புனுகுச் சட்டம் மட்டுமே பூசப்படுகிறது. தேங்காயை உடைக்காமல் முழுக் காயாகவே நிவேதனம் செய்கின்றனர். பின்னர் அந்தக் காயை கீழ்தளத்தில் அமைந்த பலி பீடத்தில் படையலிட்டு அதனை உடைக்கின்றனர். அப்படி உடைக்கப்பட்ட தேங்காயினை வீட்டிற்கு எடுத்து வருவதோ, சமையலுக்குப் பயன்படுத்துவதோ கூடாது. அந்தத் தேங்காயைச் சிறு துண்டுகளாக்கியோ அல்லது பூவாகத் துருவல் செய்தோ அங்கேயே பச்சையாகவே தானும் சாப்பிட்டுப் பிறருக்கும் தர வேண்டும் என்பது ஐதீகம்.

சில சிறப்பு நாட்களில் சட்டநாதருக்கு வடை மாலைகள் சாத்தப்படுவதும் உண்டு. சட்டநாதருக்காக வேண்டிக் கொள்ளும் அபிஷேகம் யாவும் இவருக்கு எதிரே முதல் தளத்திலும், இரண்டாம் தளத்திலும் உள்ள பலி பீடங்களுக்கே செய்யப்படுகின்றன.

சட்டநாதருக்கு ஒவ்வொரு வாரமும் செய்யப்படும் நள்ளிரவு பூஜை விசேஷமானதாகும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 10 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை பலி பீடத்திற்குச் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சட்ட நாதருக்குச் சிறப்பு பூஜைகளும் செய்யப்படுகின்றன. 

இக்கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள வலம்புரி மண்டபத்தில் (இதனை யோக ஸ்தானம் என்றும் அழைக்கின்றனர்) கருவறையுடன் கூடிய சிறிய சந்நிதி ஒன்று காணப்படுகிறது. 

இதன் பிரகாரச் சுவரில் எட்டு முனைகளிலும் எட்டு மாடங்கள் அமைக்கப்பட்டு அஷ்ட பைரவர்கள் அமைக்கப்பட்டுள்ளனர். இங்கு பைரவர் ஸ்ரீ விமானத்திலிருப்பதால் ஆகாச பைரவர் என்றும், எப்போதும் மகிழ்ச்சியுடன் ஊஞ்சலில் ஆடிக் கொண்டே இருப்பதால் மகா ஆனந்த பைரவர் என்றும் அழைக்கப்படுகிறார்.

இந்த வலம்புரி மண்டபம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு பூஜையின் போது மட்டுமே திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. ஏனைய வேளைகளில் இது மூடப்பட்டே இருக்கும்.

Tags:    

Similar News