கோவில்கள்
ஸ்ரீகாளத்தீஸ்வரர் கோவில்

புதுவையில் அருள்பாலிக்கும் ஸ்ரீகாளத்தீஸ்வரர்

Published On 2022-04-05 07:45 GMT   |   Update On 2022-04-05 07:45 GMT
கோவில் பலி பீடத்தின் மேற்கே மிக அருகில் வானத்தை தொட்டுக் கொண்டிருக்கக் கூடிய ஏறக் குறைய 36 அடி ஒரு அங்குல உயரமுள்ள உறுதிமிக்க கொடி மரம் கம்பீரமாக நிற்கின்றது.
புதுவை நகரின் இதயமாக விளங்கக்கூடிய மைய பகுதியில், கிழக்கில் மாதா கோவில் தெரு என்று அழைக்கப்படும் முற்கால நெசவாளர் தெருவுக்கும், மேற்கில் அம்பலத்தாடும் ஐயன் திருமடத்துக்கும், வடக்கே கோவில் பெயர் விளங்கும் காளத்தீஸ்வரன் கோவில் தெருவுக்கும், தெற்கே கொசக்கடை தெரு என்று கூறப்படும் அம்பலத்தடையார் மடம் தெருவுக்கும் இடையில் மிஷன் வீதியில் சுமார் 12 ஆயிரம் சதுர அடி பரப் பளவில் காளத்தீசுவரர் கோவில் பிரமாண்டமாக அமைந்துள்ளது. சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாக இக்கோவில் திகழ்கிறது.

இப்பூவுலகம் “நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று” ஆகிய பஞ்சபூதங்களின் ஆளுமைக்கு உட்பட்டே இயங்குகிறது என்பது யாவரும் அறிந்ததே.
பஞ்சபூதங்களின் ஆதிக்கத்தினை உணர்த் தும் வகையில் அருள்பாலித்து வரும் திருத்தலங்கள் சிறப்பானதாகும். அவற்றுள் தென்கயிலாயம் என்றும், வாயுதலம் (காற்றுத்தலம்) என்றும் “ராகு-கேது தலம்” என்றும் அழைக்கப்படுவது செட்டிக்கோவில் எனப்படும் காளத்தீஸ்வரர், வரதராஜ பெருமாள் கோவில். இது பரத்வாஜ மகரிஷி, சிவகோசரியார், கண்ணப்ப நாயனார் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றதும், ‘கயிலை பாதி காளத்தி பாதி” என்று நக்கீரரால் போற்றி துதிக்கப்பட்ட திருத்தலமும் ஆகும். மூவர் பாடல் பெற்ற திருத்தலம். பக்தர்களால் “அஷ்டமா சித்திகள் அனைத்தும் தரும் காளத்தி” என்று போற்றி வணங்கிய திருத்தலம்.

இவ்வாறு பலவகையினாலும் சிறப்புற்று, தன்னை நாடிவந்தோருக்கு எண்ணியதை எல்லாம் நிறைவேற்றி அருள்பாலித்து வரும் இத்திருத்தலத்தில் உறையும் ஸ்ரீமத் ஞானாம்பிகா சமேத ஸ்ரீ காளத்தீஸ்வர பெருமானின் திருவருளால் ஈர்க்கப்பட்ட புதுச்சேரி வாழ் ஆயிர வைசிய செட்டிமார்கள் பன்னெடுங்காலத்திற்கு முன்பே இந்த இறைவியையும், ஈசனையும் தங்களது இதயத்துள் வைத்து “திருமூலர்” கூறியவாறு (இதயக்கோயில்) பூஜித்து வந்தனர். இவ்வாறு பூஜிக்கப் பெற்று வந்த தெய்வங்களுக்கு திருக்கோயில் கட்டிட எண்ணம் கொண்ட புதுச்சேரி வாழ் ஆயிர வைசிய செட்டிமார்கள் மனம் உருகி இறைவன் திருவருளை வேண்டிட இறைவனும் அவர்களின் மேலான அன்புக்கு கட்டுப்பட்டவனாக திருவருள் வழங்கினார்.

இறையருள் கிடைக்கப் பெற்ற அவர்கள் நகரின் நடுவில் தங்களுக்குச் சொந்தமான இடத்தில் பெருங்கோவில் எழுப்பி அதில் ஸ்ரீமத் ஞானாம்பிகா சமேத ஸ்ரீ காளத்தீஸ்வர பெருமானுடன் பரிவார மூர்த்திகளையும் அமைத்தனர். அதுமட்டுமின்றி சிவபெருமானின் இடதுபுறம் ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ வரதராஜப் பெருமாளுக்கும் விக்கிரகத்தினை அமைத்து பிரதிஷ்டை செய்து மகா கும்பாபிஷேகமும் செய்து வழிபட்டு வந்தனர்.

பன்னெடுங்காலத்திற்கு முன்னரே சைவமும் வைணவமும் ஒன்று என்பதற்கு இலக்கணமாக புதுவை வாழ் ஆயிர வைசிய செட்டிமார்கள் சான்றாக இருந்துள்ளார்கள். இன்றளவும் இருந்து வருகிறார்கள். இவ்வாறு போற்றப்படும் ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஸ்ரீ காளத்தீஸ்வர சுவாமி ஸ்ரீதேவி -பூமிதேவி சமேத ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவில் காலப்போக்கில் எல்லோராலும் அன்புடனும் பெருமிதத்துடனும் “செட்டிக்கோவில்” என்றே அழைக்கப்படுகின்றது.

ராஜகோபுரத்தின் சிறப்பு

கோவிலின் கிழக்கு புறத்தில் ராஜகோபுரம் 5 சிலைகளுடன் கம்பீரமாக காட்சி தருகிறது. இதில் என்ன விசேஷம் என்றால் ராஜகோபுரத்தின் முன்புறம் சிவன் அவதாரங்களும், பின்புறம் பெருமாள் அவதாரங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது சிவன்-பெருமாள் கோவில் இங்கு ஒன்றாக அமைந்து இருப்பதை பறைசாற்றுவதாக உள்ளது.

கோவில் தெற்கு வாசலில் 30 அடி உயரத்திற்கு 3 சிலைகளுடன் ஞானாம்பிகை அம்மன் கோபுரமும், வடக்கு புறம் 3 நிலை கொண்ட 30 அடி உயர பெருமாள் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் உள்ளே விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர், சிவன், அம்பாள், பெருமாள் சன்னதிகளில் 6 கோபுரங்கள் அமையப் பெற்றுள்ளது.

கொடி மரம்

கோவில் பலி பீடத்தின் மேற்கே மிக அருகில் வானத்தை தொட்டுக் கொண்டிருக்கக் கூடிய ஏறக் குறைய 36 அடி ஒரு அங்குல உயரமுள்ள உறுதிமிக்க கொடி மரம் கம்பீரமாக நிற்கின்றது. அன்பர் மனத் தில் அண்டவெளி பராசக்தியை ஈர்த்துக் கொடுக்க வல்லது கொடிமரம் ஆகும். இது ‘சூட்சும லிங்கம்’ எனவும் வழங்கப்படும்.

கொடிமரத்தின் உச்சியில் 2 கலசங்களும், நந்தியும் அமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற கருத்தில் கொடி மரத்தின் உச்சியில் அமைந்துள்ள மணிகள் காற்றில் கலகலத்து கொண்டு இருக்கின்றன.

கொடி மரத்தின் கிழக்கு பகுதியில் நர்த்தன விநாயகரும், தெற்கு வடக்கு முறையே பார்வதி பரமேசுவரனும், வள்ளி தெய்வானையுடன் முருகரும், மேற்கே சிவனை பார்த்தவாறு லிங்கோத்பவரும் செப்பு தகட்டில் பதிக்கப்பட்டு அமைந்துள்ளனர்.

பலிபீடத்தின் முன் தலை தாழ்த்தி வணங்கிய உடனே கொடி மர உச்சியை அண்ணாந்து நோக்கும் அமைப்பை எண்ணிப் பார்த்தால் “பணிவு உண்டாயின் உயர் பதவி உண்டாகும். புகழ் வானளாவ விரிந்து நிற்கும்” என்ற கருத்து நமக்கு மிக எளிதில் விளங்கி விடுகின்றது. மண்ணையும், விண்ணையும் இணைக்கின்ற ஒரு சிறப்பு கொடிமரத்துக்கு உண்டு.

2 கோவில்களிலும் கொடி மரம், பலி பீடம், கோபுரம் என தனித்தனியாக இருப்பினும், ஒரு கோவிலின் சுற்றுப்பகுதியிலேயே அமைந்துள்ளது சிறப்பு கொண்டதாகும்.

கோவில் நடை திறக்கும் நேரம்

ஞாயிறு முதல் புதன்கிழமை வரை காலை 6.30 மணி முதல் 11 மணி வரை. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.

வியாழக்கிழமை

காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை. மாலை 4 மணி முதல் 9 மணி வரை.

வெள்ளி-சனிக்கிழமை

காலை 6.30 மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.
விசேஷ நாட்களில் கோவில் நடை திறக்கும் நேரம் மாறுபடும்.

கன்னி மூலையில் கற்பக விநாயகர்

ராஜகோபுரத்தின் உள் நுழைந்து, அகன்ற சுற்று பகுதியில் (பிரகாரம்) கோவிலை முதல்சுற்று வலம் வந்தால், கன்னி மூலையில் கற்பக விநாயகர் சன்னதியை காணலாம்.

விநாயகர் கோவில் கருவறை, அர்த்தமண்டபம், முன் மண்டபம் என்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. முன் மண்டபம் அஷ்டப்பிரதான் என்று சொல்லுமாறு 8 தூண்களால் அமைக்கப்பட்டுள்ளது. விநாயகர் திருஉருவத்துக்கு எதிரில் மூஞ்சுறு என்று சொல்லக்கூடிய விநாயகப் பெருமானின் வாகனம் மிகவும் சிறியதாக உள்ளது. இதை நோக்கும்போது, “பருத்த விநாயகனுக்கு சிறுத்த மூஞ்சுறு” என்ற தொடர் உண்மையாகவே இங்கு தோற்றம் அளிக்கின்றது. “எளிய பக்தி வலிமையை தாங்கும்” என்பது சொல்லாமல் புலப்படுகின்றது. எந்த காரியத்தை தொடங்கும் போதும், கோவிலை வலம்வரும் போதும், முதலில் விநாயகப் பெருமானை வணங்கியே தொடங்க வேண்டும் என்பது முன்னோர் வகுத்த மரபு ஆகும்.

கோவில் முகவரி

ஸ்ரீகாளத்தீஸ்வரர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் தேவஸ்தானம் (செட்டிக் கோவில்),
எண்.106, மிஷன் வீதி,
புதுச்சேரி-605 001.
கோவில் அலுவலக தொலைபேசி எண். 0413-2335495.

கோவிலுக்கு செல்வது எப்படி?

ஸ்ரீகாளத்தீஸ்வரர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் தேவஸ்தானம் (செட்டிக் கோவில்) புதுவை பஸ் நிலையத்தில் இருந்து 1 1/2 கிலோ மீட்டர் தூரத்திலும், ரெயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திலும், விமான நிலையத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
புதுவை புதிய பஸ் நிலையத்தில் இருந்து காலாப்பட்டு, கனகசெட்டிகுளம், முத்தியால்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் டவுன் பஸ்சில் ஏறி செஞ்சி சாலை கார்னர் அம்பலத்தடையார் மடம் வீதி பஸ் நிறுத்தத்தில் இறங்கி கோவிலுக்கு நடந்து செல்லலாம்.
Tags:    

Similar News