செய்திகள்
வருமான வரி கணக்கு தாக்கல்

தமிழகத்தில் 34 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் - அதிகாரிகள் தகவல்

Published On 2021-01-10 23:33 GMT   |   Update On 2021-01-10 23:33 GMT
தமிழகத்தில் 34 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்து உள்ளனர். வருகிற மார்ச் 31-ந் தேதி வரை அபராதத்துடன் கணக்கு தாக்கல் செய்யலாம் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
சென்னை:

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த 2019-2020-ம் நிதியாண்டுக்கு அபராதமின்றி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை வழங்கப்பட்டிருந்தது. பின்னர், இந்த அவகாசம் கடந்த ஆண்டு டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து வரி செலுத்துவோரின் கோரிக்கையை ஏற்று, அபராதமின்றி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், ஜனவரி 10-ந் தேதி வரை அதாவது நேற்று வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் தற்போது அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்து உள்ளது. வருகிற மார்ச் 31-ந் தேதி வரை, அபராதம் செலுத்தி வருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம். இதன்படி ரூ.5 லட்சத்துக்கு கீழ் வருவாய் ஈட்டுவோர் ரூ.1,000-ம், ரூ.5 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுவோர் ரூ.10 ஆயிரம் அபராதமும் செலுத்த வேண்டும். இவை, கணக்கு தணிக்கைக்கு அவசியம் இல்லாத, வரி கணக்குகளுக்கு மட்டும் பொருந்தும். தணிக்கை செய்ய வேண்டிய கணக்குகளுக்கு வருகிற பிப்ரவரி மாதம் 15-ந் தேதி வரை அவகாசம் உள்ளது. அதற்குள், அபராதமின்றி கணக்கு தாக்கல் செய்யலாம். மார்ச் 31-க்கு பிறகு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இயலாது.

நிர்ணயிக்கப்பட்ட வருமான உச்ச வரம்பை மீறும், மாத ஊதியதாரர்கள், ஓய்வூதியதாரர்கள் அனைவரும் ஆண்டுதோறும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது அவசியம். 2019-2020-ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல், கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடங்கியது.

இதன்படி, 2019-2020-ம் நிதியாண்டுக்கான கணக்கு தாக்கலை, தற்போது வரை, நாடு முழுவதும் 5.5 கோடி பேர் தாக்கல் செய்துள்ளனர். இது, 2018-2019-ம் நிதியாண்டில், தற்போதைய கால கட்டம் வரை, 6.51 கோடி பேர் கணக்கு தாக்கல் செய்திருந்தனர். தற்போது வரை, தமிழகத்தில் மட்டும் 34 லட்சம் பேர், கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இது, கடந்த ஆண்டில் 42 லட்சமாக இருந்தது.

மேற்கண்ட தகவலை வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Tags:    

Similar News