தமிழ்நாடு
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட் தேர்வு மாணவர்களின் மருத்துவ கனவை சிதைப்பதாக உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

Published On 2022-01-08 07:09 GMT   |   Update On 2022-01-08 09:02 GMT
நீட் தேர்வுக்கு விலக்கு குறித்து விவாதிக்க நடைபெற்ற சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

நீட் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாநில அரசின் நிதியில் இருந்து மாநில அரசுகளால் தொடங்கி நடத்தப்பட்டு வரும் மருத்துவக் கல்லூரிகளில் அம்மாநில மாணவர்கள் எந்த வகையில் சேர்க்கப்பட வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யும் உரிமையை மாநில அரசுகளிடம் இருந்து ஒன்றிய அரசு பறித்து விட்டது. இது மாநில சுயாட்சிக்கு எதிரானது.

ஒன்றிய அரசினால் மாநில அரசுகளின் மீது திணிக்கப்பட்டுள்ள நீட் தேர்வானது இது போன்ற நுழைவு தேர்வுக்கான சிறப்பு பயிற்சிகளை பெறுவதற்கு வசதி வாய்ப்புள்ள மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாகவும், மருத்துவ மாணவர் சேர்க்கையில் 12 ஆண்டுகள் படிக்கக் கூடிய பள்ளி கல்வியால் எவ்வித பயனும் இல்லை என்ற நிலையை உருவாக்கி பள்ளி கல்வி அமைப்பையே அர்த்தமற்றதாக்கும். இந்த நீட் தேர்வு மாணவர்களின் கல்வி கனவை சிதைப்பதாக மட்டுமின்றி அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள கூட்டாட்சி தத்துவத்தை சீரழிப்பதாகவும் அமைந்து விட்டது.

ஆகவே மாநில உரிமைகளை நிலைநாட்டவும் நம் மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றிடவும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 13.9.2021 அன்று ஒருமனதாக ஒரு சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக மாநில ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

ஆனால் இந்த சட்ட முன்வடிவை மாநில ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் இருப்பது சட்டமன்றத்தின் இறையாண்மைக்கு ஏற்றது அல்ல என்று கருதப்படுகிறது.

தமிழக மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால நலன் கருதி முதல்-அமைச்சரே நேரில் சென்று ஆளுநரை சந்தித்து நீட் சட்ட முன்மொழிவை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொண்டார்.

மேலும் இது தொடர்பாக கடந்த 28.12.2021 அன்று தமிழ் நாட்டில் உள்ள அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் குடியரசு தலைவர் அலுவலகத்தில் சந்திக்க சென்ற நேரத்தில் அவரை சந்திக்க இயலவில்லை என்பதால் மனுவை அவரது அலுவலகத்தில் அளித்து அன்று மாலையே அம்மனுவும் ஒன்றிய உள் துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து மேலும் வலியுறுத்திட ஒன்றிய உள்துறை மந்திரியை சந்திக்க நேரம் கோரி பல நாட்கள் ஆகியும் சந்திக்க மறுத்து விட்டதால் அவரிடம் கொடுக்கப்பட வேண்டிய மனுவும் அவரது அலுவலகத்திலேயே கொடுக்கப்பட்டது.

தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க ஒன்றிய உள்துறை மந்திரி மறுத்தது மக்களாட்சி மாண்புகளுக்கு எதிரானது என்று 6.1.2022 அன்று தமிழக சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் அறிவித்து இன்றைக்கு அனைத்துக் கட்சி கூட்டத்திலும் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது.

ஒன்றிய உள்துறை மந்திரியிடம் நாம் ஏற்கனவே அளித்த கோரிக்கையை பரிசீலிக்க அவரிடம் இருந்து அழைப்பு வரப்பெற்றால் அனைத்துக் கட்சிகளின் சார்பில் அவரை சந்திக்கலாம் எனவும் இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப் பட்டது.

நாமும், நமது மாநிலமும் இன்று அடைந்துள்ள இந்த வளர்ச்சியை சமூக நீதிக்கான அரசியல் சட்ட மற்றும் மக்கள் போராட்டங்களின் மூலமே பெற்றுள்ளோம் என்ற அடிப்படையில் ஏழை எளிய கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வி கனவுகளை சிதைத்திடும் மாநில சுயாட்சி தத்துவத்தை சீர்குலைத்திடும் நீட் தேர்வு முறையை முழுமையாக நீக்கிட சட்ட ரீதியாக தேவையான நடவடிக்கைகளை மூத்த சட்ட வல்லுனர்களை கலந்து ஆலோசித்த பின் தமிழ்நாடு சட்டமன்றத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து மேற்கொள்வது எனவும் நீட் தேர்வின் பாதகங்களை நாட்டின் மற்ற மாநிலங்களும் உணரும் வகையில் ஒருமித்த கருத்தை உருவாக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது எனவும் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது என்பது தி.மு.க. மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழக மக்களின் விருப்பம்.

தமிழக மக்களின் விருப்பம் என்பதை கடந்து தமிழக முதல்-அமைச்சர் ஒன்றிய அரசின் கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதானை சந்திக்க அனுப்பினார்கள். நாங்கள் அவரிடம் போய் நீட் தேர்வுக்கான விலக்கு அளிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய போது அவரே சொன்னது, “தமிழகம் மட்டுமல்ல நான் சார்ந்திருக்கும் ஒடிசா மாநிலத்திலும் நீட் தேர்வுக்கு எதிரான மனநிலை மக்களிடத்தில் மிகுந்து இருக்கிறது. நீட் தேர்வு தேவையில்லை என்கிற கருத்து மற்ற மாநிலங்களிலும் மேலோங்கி இருக்கிறது. என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதில் அரசியல் இருக்கிறது” என்று நேரடியாக ஒப்புக் கொண்டார்.

இது தமிழகத்தில் எழுந்துள்ள எதிர்ப்பு உணர்வு அல்ல. ஒட்டு மொத்த இந்தியாவிலும் இந்த எதிர்ப்பு என்பது எல்லோர் இடத்திலும் இருக்கிறது.

ஜனநாயக ரீதியில் அனைத்துக் கட்சி தலைவர்களின் கருத்தையும் கேட்டு பெறுவது என்பது உகந்தது என்ற காரணத்தால் பா.ஜனதாவும் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டது. பா.ஜனதாவில் இருந்து வந்தவர்கள் அவர்களின் கருத்தை பதிவு செய்து இருக்கிறார்கள்.

ஜனநாயக ரீதியாக அந்த கருத்தும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. மீண்டும் உள்துறை மந்திரியை சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆளுநரை கூட அனைத்துக் கட்சி தலைவர்கள் போய் சந்திக்க வாய்ப்பு இருக்கிறது.

அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்று தீர்மானத்துக்கு முழு ஆதரவை தெரிவித்து இருக்கிறார். அவர்தான் மீண்டும் ஒருமுறை உள்துறை மந்திரியை சந்திக்கலாம் என்கிற கருத்தை சொன்னார். இதை முதல்-அமைச்சர் ஏற்றுக் கொண்டு மீண்டும் சந்திப்பதற்கான நடவடிக்கையை எடுப்பதாக கூறினார்.

சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து பிறகு மீண்டும் சட்டமன்ற கட்சி தலைவர்களுடன் பேசி அடுத்த கட்ட போராட்டத்துக்கு மற்றவர்களை முன்னெடுத்து செல்வோம். ஒன்றிய அரசு 15 சதவீத மாணவர்களுக்கான கவுன்சிலிங்கை நாளை தொடங்க உள்ளது. 15 நாளில் கவுன்சிலிங் முடிந்த தும் உடனே மெரிட் லிஸ்ட் வெளியிடப்பட்டதும் இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங்கை இங்கு தொடங்கி விடுவோம். அதில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு பின்பற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News