ஆன்மிகம்
திருச்செந்தூர் கோவில் நாழிக்கிணற்றில் பக்தர்கள் புனித நீராட அனுமதி

10 மாதங்களுக்கு பிறகு திருச்செந்தூர் கோவில் நாழிக்கிணற்றில் பக்தர்கள் புனித நீராட அனுமதி

Published On 2021-02-04 05:07 GMT   |   Update On 2021-02-04 05:07 GMT
10 மாதங்களுக்கு பிறகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நாழிக்கிணற்றில் பக்தர்கள் புனித நீராட அனுமதி வழங்கப்பட்டது.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 20-ந்தேதியில் இருந்து கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

பின்னர் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம் 1-ந்தேதியில் இருந்து கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் மீண்டும் அனுமதிக்கப்பட்டனர். எனினும் கோவில் கடலில் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்படவில்லை.

தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் 18-ந்தேதியில் இருந்து கோவில் கடலில் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் கூட்டமாக நீராடுவதை தவிர்க்கும் வகையில், புண்ணிய தீர்த்தமான கோவில் நாழிக்கிணற்றில் பக்தர்கள் புனித நீராட அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினத்தில் இருந்து கோவில் நாழிக்கிணற்றிலும் பக்தர்கள் புனித நீராட அனுமதி வழங்கப்பட்டது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் நாழிக்கிணற்றில் பக்தர்கள் புனித நீராடினர். 10 மாதங்களுக்கு பிறகு நாழிக்கிணற்றில் புனித நீராட அனுமதி அளிக்கப்பட்டதால், ஏராளமான பக்தர்கள் மகிழ்ச்சியுடன் புனித நீராடி வருகின்றனர்.
Tags:    

Similar News