செய்திகள்
காங்கயம் பஸ் நிலையத்தில் இருந்து தாராபுரம் செல்லூம் சாலையில் கடைகள் அடைக்கப்பட்டுள்ள காட்சி

திருடனை தாக்கிய மளிகை கடைக்காரர் கைதை கண்டித்து இன்று கடையடைப்பு போராட்டம்

Published On 2019-11-16 11:13 GMT   |   Update On 2019-11-16 11:13 GMT
திருடனை தாக்கிய மளிகை கடைக்காரர் கைதை கண்டித்து காங்கியத்தில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
வெள்ளகோவில்:

காங்கயம் அத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 37). அங்குள்ள பழைய கோட்டை சாலையில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

இவரது கடையில் ஏற்கனவே 3 முறை திருட்டு போயிருந்தது. இதனையடுத்து கடையில் கண்காணிப்பு கேமிரா பொருத்தி அதனை செல்போனில் பார்க்கும்படி லிங் செய்துள்ளார். கடந்த 12-ந்தேதி இவர் வழக்கம்போல் வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.

நள்ளிரவில் இவரது மளிகை கடையில் மர்ம நபர் கூரையை பிரித்து உள்ளே இறங்கினார். இதை வீட்டில் இருந்து செல்போன் மூலம் பார்த்த கடை உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார். உஷாரான சுரேஷ் தனது கடை ஊழியர்களை அழைத்துக்கொண்டு கடைக்கு சென்றார். கடையில் கொள்ளையடித்த பொருட்களை எடுத்துக்கொண்டு கொள்ளையன் பிரித்த கூரை வழியே தப்ப முயன்றார். அப்போது அவர் தவறி விழுந்தார்.

இதனையடுத்து சுரேஷ் மற்றும் கடை ஊழியர்கள் கொள்ளையனை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் இது குறித்து காங்கயம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்த கொள்ளையனை மீட்டு காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மளிகை கடையில் திருட்டில் ஈடுபட்டது விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா சாமிபுரத்தை சேர்ந்த செல்வராஜ் (43) என்பது தெரியவந்தது. அவரை கட்டையால் தாக்கி காயம் ஏற்படுத்தியதாக கடை உரிமையாளர் சுரேசை போலீசார் கைது கோவை சிறையில் அடைத்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் காங்கயம் நகர அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் அவசர கூட்டம் நேற்று மாலை நடந்தது. மளிகை கடைக்காரர் சுரேசை போலீசார் கைது செய்ததை கண்டித்து இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை காங்கயத்தில் வியாபாரிகள் அனைவரும் கடை அடைப்பு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.
Tags:    

Similar News