ஆன்மிகம்
கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் நின்ற பக்தர்களை படத்தில் காணலாம்.

தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் இன்று கள்ளர்வெட்டு திருவிழா

Published On 2020-12-15 03:39 GMT   |   Update On 2020-12-15 03:39 GMT
தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) கள்ளர்வெட்டு திருவிழா நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே காயாமொழியை அடுத்த தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் ஆண்டுதோறும் கள்ளர்வெட்டு திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு கள்ளர்வெட்டு திருவிழா கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள், வில்லிசை நடைபெற்றது. கடந்த 2 நாட்களாக கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளர்வெட்டு திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. காலை, மதியம் சுவாமி கற்குவேல் அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெறுகிறது. மாலை 4 மணி அளவில் கோவில் பின்புறம் உள்ள செம்மண் தேரியில் கள்ளர்வெட்டு நிகழ்ச்சி நடைபெறும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தவும் அனுமதி கிடையாது. விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் யு-டியூப் இணையதளத்திலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

விழாவையொட்டி திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தலைமையில், கோவில் வளாகம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

நாளை மறுநாளில் (வியாழக்கிழமை) இருந்து கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News