செய்திகள்
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

தேவைப்பட்டால் நானே ஜம்மு காஷ்மீர் சென்று ஆய்வு செய்வேன்- தலைமை நீதிபதி அதிரடி

Published On 2019-09-16 08:25 GMT   |   Update On 2019-09-16 10:03 GMT
தேவைப்பட்டால் ஜம்மு காஷ்மீருக்கு நேரில் சென்று அங்குள்ள நிலவரம் குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்தார்.
புதுடெல்லி:

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஆஜராகி, காஷ்மீரின் தற்போதைய நிலவரம் மற்றும் மத்திய அரசின் நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கினார். காஷ்மீரில் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருவதாகவும், ஊடகங்களுக்கு தடை எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.



அதன்பின்னர் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறியதாவது:-

ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலையை கொண்டு வருவதை  மத்திய அரசும் ஜம்மு காஷ்மீர் நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் முழுமையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அதேசமயம் தேசிய பாதுகாப்பையும் மனதில் கொள்ள வேண்டும்.

உயர் நீதிமன்றத்தை மக்கள் அணுக முடியாத நிலை இருந்தால் அது சாதாரண பிரச்சினை அல்ல. அசாதாரண நிலை நிலவுவதாக தகவல் வருகிறது. எனவே, அவசியம் ஏற்பட்டால் நானே ஜம்மு காஷ்மீர் சென்று ஆய்வு செய்வேன்.

ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து செப்டம்பர் 30-ம் தேதிக்குள் மத்திய அரசும், ஜம்மு காஷ்மீர் நிர்வாகமும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். இந்த மனுக்கள் மீதான அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 30-ம் தேதி நடைபெறும்.

இவ்வாறு தலைமை நீதிபதி கூறினார்.
Tags:    

Similar News