செய்திகள்
கோப்புப்படம்

திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் இயங்க திடீர் எதிர்ப்பு

Published On 2021-06-08 07:40 GMT   |   Update On 2021-06-08 07:40 GMT
கொரோனா தொற்று பரவுவதால் திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் இயங்க பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்:

தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை வேகம் எடுத்ததை அடுத்து  தமிழக அரசு கடந்த மே மாதம் 24-ந் தேதி முதல் நேற்று காலை 6மணிவரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நடைமுறைப் படுத்தியது. நேற்று முதல் 14-ந்தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதில் தொற்று பரவல் அதிகம் உள்ள கோவை, திருப்பூர் உள்பட 8 மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் 10 சதவீத தொழிலாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து 3 வாரங்களுக்கு பின் திருப்பூரில் ஏற்றுமதி நிறுவனங்கள் மீண்டும் இயக்கத்தை தொடங்கியுள்ளன.

ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அதிகாரிகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இருப்பினும் பனியன் நிறுவனங்கள் இயங்கினால் குறைந்து வரும் தொற்று மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சில தொழிற்சங்கத்தினர் மற்றும் பல்வேறு தரப்பினர் கவலை தெரிவித்துள்ளனர். 

ழுழு ஊரடங்கின் போதே திருப்பூரில் பல இடங்களில் பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் சட்ட விரோதமாக இயங்கின.அப்படி சட்ட விரோதமாக இயங்கிய ஒரு பனியன் நிறுவனத்தில் 47 பெண் தொழிலாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு அந்த நிறுவனத்துக்கு சீல் வைத்த சம்பவமும் நடந்தது. 

இதேபோல் சட்ட விரோதமாக இயங்கிய ஏராளமான பனியன் நிறுவனங்கள் கண்டறியப்பட்டு சீல் வைக்கப்பட்டது. தற்போது பனியன் நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அரசின் நிபந்தனைகளை பின்பற்றாமல் அதிக அளவில் ஊழியர்களை கொண்டு தங்களது நிறு வனங்களை இயக்க தொடங்கி விடுவார்கள். இதனால் தொழிலாளர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்படும். 

எனவே தொற்று பாதிப்பு குறைந்த பிறகு பனியன் நிறுவனங்கள் இயங்க அனுமதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அனுமதியை ரத்து செய்யக்கோரி, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதேபோல்  பல்வேறு தரப்பினரும் முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்ப முடிவு செய்துள்ளனர். 

Tags:    

Similar News