ஆன்மிகம்
ரேணுகாதேவி

தங்கம் தழைக்கச் செய்யும் ஜமதக்னி ரேணுகாதேவி பரசுராமர் கோவில்

Published On 2020-02-14 01:33 GMT   |   Update On 2020-02-14 01:33 GMT
செம்பனார் கோவில் கடை வீதியில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஜமதக்னி ரேணுகாதேவி பரசுராமர் ஆலயம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
செம்பனார் கோவில் கடை வீதியில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஜமதக்னி ரேணுகாதேவி பரசுராமர் ஆலயம். செம்பனார் கோவில், கீழையூர், முடிகண்டநல்லூர், மேலபாதி என நான்கு கிராமங்களின் எல்லையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. எனவே இந்த ஆலயத்தை ‘எல்லையம்மன் கோவில்’ என்றும் அழைக்கின்றனர்.

தல வரலாறு

விதர்ப்ப தேசத்து மன்னனான இறைவத வேந்தன், பிரம்ம தேவனின் அருள்பெற்றவன். இவனது மகள் ரேணுகா, காண்பவர் மயங்கும் அழகுப் பதுமையாக இருந்தாள். பருவம் வந்ததும் தனக்கு ஏற்ற கணவரை தேர்வு செய்ய, தந்தையின் அனுமதியுடன் குண்டலிபுரம் வனத்திற்கு வந்தாள்.

அங்கே இறைவனின் அருளைப் பெற கடுந்தவம் செய்து கொண்டிருந்த ஜமதக்னி முனிவரைக் கண்டு, அவர் அழகில் மயங்கினாள். அவரையே கணவனாக அடைய வேண்டும் என முடிவு செய்தாள். ஜமதக்னி முனிவரிடம், தன்னை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டவே, அவர்கள் இருவரும் மணம் புரிந்து கொண்டனர். இந்த தம்பதியருக்கு நான்கு புதல்வர்கள் பிறந்தனர்.

இவர்களின் மூத்த மகனான பரசுராமர், தவம் புரிவதற்காக மகேந்திர மலைக்குச் சென்றுவிட்டார். மற்ற மகன்களுடன் ஜமதக்னி முனிவரும், ரேணுகாவும் வசித்து வந்தனர். கற்புக்கரசியான ரேணுகா, ஆற்றங்கரைக்குச் சென்று அங்குள்ள மணலில் ஒரு குடம் செய்து, அதில் நீர் பிடித்து வருவாள். அதைக் கொண்டு ஜமதக்னி முனிவர் சிவபூஜை செய்வார். ஒரு முறை நீர் எடுக்கச் சென்ற ரேணுகா, நீரில் ஒரு கந்தா்வனைக் கண்டு மனம் மயங்கினாள். இதனால் அவள் செய்த மண் குடம் உடைந்தது. இதை தன் தவ வலிமையால் அறிந்த ஜமதக்னி முனிவர், தன் மூன்று மகன்களிடமும் தாயின் தலையை வெட்டி விடும்படி உத்தரவிட்டார். ஆனால் அவர்கள் அதற்கு மறுத்துவிட்டனர்.

உடனே பரசுராமரை, தன் தவ சக்தியால் அழைத்து, தாயின் தலையை துண்டிக்கச் சொன்னார். மறுபேச்சு பேசாது, தாயின் தலையை துண்டித்தார் பரசுராமர். இதனால் மகிழ்ந்த முனிவர், “உனக்கு வேண்டிய வரம் கேள்” என்றார். உடனே பரசுராமன், “தாயை உயிரோடு திருப்பித் தாருங்கள்” என்றார்.

அதன்படியே ரேணுகாவை உயிரோடு கொண்டு வந்தார் ஜமதக்னி முனிவர். மேலும் “உன்னை நினைப்பவர்களை நீ காத்து அருள்புரிவாய்” என்ற வரத்தையும், ரேணுகாவுக்கு வழங்கினார்.

இந்த ரேணுகா தேவியின் ஆலயம்தான் முடிகண்டநல்லூரில் உள்ளது. ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் ஐந்து நிலை ராஜகோபுரம் சுமார் 60 அடி உயரத்துடன் கம்பீரமாக காட்சி தருகிறது. உள்ளே நுழைந்ததும் விசாலமான பிரகாரம். எதிரே நந்தியும், வலதுபுறம் பிள்ளையாரும் இருக்க, அடுத்து மகாமண்டபம் உள்ளது. மகாமண்டபத்தின் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் முருகனும் அருள்பாலிக்கிறார்கள். தனி சன்னிதியில் ஜமதக்னி முனிவர், ரேணுகாதேவி, பரசுராமர் வீற்றிருக்கின்றனர்.

இதையடுத்து அர்த்த மண்டபமும், தொடர்ந்து கருவறையும் உள்ளது. கருவறையில் அன்னை ரேணுகாதேவி கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். இங்கு அன்னையின் தலை பகுதி மட்டுமே கருவறை தெய்வமாய் அருள்பாலிக்க அன்னையின் பின்பறம் பல நூற்றாண்டுகளை கடந்த மண்புற்று ஒன்று அன்னையின் சிரசைவிட உயரமாக வளர்ந்து நிற்கிறது.

அன்னைக்கு நடைபெறும் சொர்ணாபிஷேகம், இங்கு வெகு பிரசித்தம். புதியதாக நகைகள் வாங்கும் பெண்கள் அதை அன்னைக்கு அணிவித்து, அன்னைக்கு சொர்ணாபிஷேகம் செய்து தங்கள் நகைகளை திரும்ப வாங்கிச் செல்கின்றனர். இதனால் தங்கள் வீட்டில் தங்கம் மேலும் தழைக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.

ஆலயத்தின் தலவிருட்சம் வேம்பு. தீர்த்தம் வடக்கே உள்ள குளம். தவிர ஆலயத்தின் பின்புறம் காவிரி நதி தெற்கு வடக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆலய திருச்சுற்றில் தெற்கில் எல்லையம்மன் என அழைக்கப்படும் ரேணுகாதேவியின் சன்னிதியும், வடக்கில் ஜமதக்னி முனிவரின் சன்னிதியும் உள்ளன. தேவக்கோட்டத்தில் தெற்கில் ஐந்து தலை நாகத்தின் சிற்பமும், மேற்கில் விஷ்ணு துர்க்கையும் அருள்பாலிக்க, வடக்கில் நாகம் சிவனை பூஜை செய்யும் அற்புத சிற்பம் காணப்படுகிறது.

தன்னை நாடும் பக்தர்களின் குறைகளை குறைவின்றி தீர்த்துவைப்பதில், இத்தல அன்னைக்கு நிகரில்லை என்று பக்தர்கள் நம்புவது உண்மையே.

இந்த ஆலயம் தினமும் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்


நாகை மாவட்டம் மயிலாடுதுறை- திருக்கடையூர் சாலையில் உள்ளது செம்பனார் கோவில். இதன் அருகே உள்ளது முடிகண்டநல்லூர் ஜமதக்னி ரேணுகாதேவி ஆலயம்.

ஜெயவண்ணன்
Tags:    

Similar News