ஆன்மிகம்
சபரிமலையில் பக்தர்கள் கூட்டம்.

சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தது

Published On 2021-11-25 03:19 GMT   |   Update On 2021-11-25 03:19 GMT
கேரளாவில் பரவலாக பெய்து வரும் கனமழையால் சபரிமலையில் சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளது.
நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு கடந்த 15-ந் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. 16-ந் தேதி முதல் ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு தினசரி 30 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

கேரளாவில் பெய்து வரும் கனமழை, மலைப்பிரதேசங்களில் அடிக்கடி ஏற்படும் நிலச்சரிவு காரணமாக, சபரிமலை தரிசனத்திற்கு வரும் முன் பதிவு செய்த பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளது. கடந்த 16-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை முன் பதிவு செய்த பக்தர்களில் 50 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சபரிமலைக்கு வந்து உள்ளனர்.

அதேபோல் தினசரி 30 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்பட்டு இருந்த போதிலும், குறைவான பக்தர்கள் மட்டுமே முன்பதிவு செய்கிறார்கள். அதிகபட்சமாக ஒரேநாளில் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு முன்பதிவு செய்து உள்ளனர்.

பக்தர்களின் வருகை குறைந்துள்ளதால் வருமானமும் கடந்த சீசனை விட குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பக்தர்களின் வருகை குறைவு குறித்து விவாதிக்க திருவனந்தபுரத்தில் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சபரிமலை தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் குறைந்த பட்சம் 8 மணி நேரமாவது சன்னிதானத்தில் தங்க அனுமதி அளிப்பது குறித்து விவாதித்தனர். இது குறித்து அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கவும் முடிவு எடுக்கப்பட்டது. மேலும், பம்பை ஆற்றில் நீராட தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்த அரசிடம் கோரிக்கை வைக்கவும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News