செய்திகள்
கைது

ஆந்திரா மற்றும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 2 கார்களில் 120 கிலோ கஞ்சா கடத்திய 9 பேர் கைது

Published On 2021-09-11 08:43 GMT   |   Update On 2021-09-11 08:43 GMT
ஆந்திரா மற்றும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 2 கார்களில் 120 கிலோ கஞ்சா கடத்திய 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டீஸ்வரம்:

தஞ்சை மாவட்ட பகுதியில் போதை பொருள் விற்பனையை தடுக்கும் வகையில் அதனை விற்கும் மொத்த வியாபாரிகள் யார்? என்று அவர்களை இனம் கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என தஞ்சை சரக டி.ஐ.ஜி பர்வேஷ்குமார் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மேற் பார்வையில் இன்ஸ்பெக்டர் மணிவேல் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன், கந்தசாமி, தலைமை காவலர் இளைய ராஜா மற்றும் போலீசார் நவீன்குமார், அருண்மொழிஅழகு ஆகியோர் அடங்கிய சரக தனிப்படை போலீசார் தஞ்சை மாவட்ட பகுதிகளுக்கு கஞ்சா எங்கிருந்து வருகிறது? அதனை சப்ளை செய்பவர்கள் யார்? என்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகிலுள்ள பாடகிரி கிராமத்தில் இருந்து கஞ்சா கடத்தப்பட்டு தமிழகத்திற்கு வருவதாக தஞ்சை சரக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனை தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வரும் கும்பலை கைது செய்ய தஞ்சை சரக தனிப்படை போலீசார் விசாகப்பட்டினம் விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த வட மாநிலத்தை செர்ந்த 6 பேரையும், தமிழகத்தை சேர்ந்த அவர்களின் கூட்டாளிகள் 3 பேர் என 9 பேரை அதிரடியாக கைது செய்து தஞ்சைக்கு கொண்டு வந்தனர்.

மேலும் அவர்கள் வைத்திருந்த ஆந்திர மாநில பதிவு எண் உள்ள 2 கார்களையும், சுமார் 120 கிலோ கஞ்சா வையும் கைப்பற்றி அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2 கார்கள், 120 கிலோ கஞ்சா கைப்பற்றப் பட்ட சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News