செய்திகள்
கைது

ஆன்லைன் லாட்டரியில் ரூ.2½ கோடி பரிசு விழுந்ததாக இளம்பெண்ணிடம் மோசடி- நைஜீரிய வாலிபர் கைது

Published On 2021-11-30 11:28 GMT   |   Update On 2021-11-30 11:28 GMT
சித்தூர் மாவட்டம் நகரி அருகே ஆன்லைன் லாட்டரியில் ரூ.2½ கோடி பரிசு விழுந்ததாக இளம்பெண்ணிடம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக நைஜீரியாவை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பதி:

சித்தூர் மாவட்டம் நகரி அடுத்த நம்பக்கத்தை சேர்ந்தவர் இளம்பெண் ரக்க்ஷிந்தா.

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஜான் என்கிற நிக்கோலஸ் ஹோக்லர் ரக்க்ஷிந்தாவின் செல்போனுக்கு கடந்த செப்டம்பர் மாதம் தொடர்பு கொண்டு ஆன்லைன் லாட்டரியில் உங்களுக்கு ரூ.2.5 கோடி விழுந்துள்ளது.

இந்த பணத்தை பெற்றுக்கொள்ள அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள என்னுடைய வங்கி கணக்கில் குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனை உண்மை என நம்பி இளம்பெண் சுமார் 3 தவணைகளாக ரூ.3,500, ரூ.15,500, ரூ.13,78,000 என ஆன்லைனில் நிக்கோலஸ் ஹோக்லரின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதற்காக இளம்பெண் வீட்டில் இருந்த தங்க நகை, வீடு நிலம் ஆகியவற்றை அடகு வைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் நிக்கோலஸ் ஹோக்லர் செல்போனை இளம்பெண் தொடர்பு கொண்டார். அப்போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து போன் சுவிட்ச் ஆப்பில் உள்ளது. அப்போதுதான் இளம்பெண்ணுக்கு தான் மோசடிக்குள்ளானது தெரிய வந்தது. இதனால் இளம்பெண் தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

ஆனால் உறவினர்கள் அவரை காப்பாற்றினர். பின்னர் கிராமத்தினர் உதவியோடு இதுகுறித்து நகரி போலீசில் புகார் அளித்தார்.

சித்தூர் மாவட்ட எஸ்.பி. செந்தில்குமார் உத்தரவின் பேரில் நகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மத்தய்ய ஆச்சாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினர். டெல்லியில் இருந்த நிக்கோலஸ் ஹோக்லரை நகரி போலீசார் கைது செய்தனர்.

அவரை சித்தூர் மாவட்டத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News