செய்திகள்

அரசு பொது தேர்வுகளில் மீண்டும் மாற்றமா?

Published On 2019-06-14 03:33 GMT   |   Update On 2019-06-14 03:33 GMT
அரசு பொது தேர்வு அட்டவணையில் சில மாற்றங்கள் இருக்கிறது. இதுபற்றி பொதுமக்களிடம் கருத்துகள் கேட்ட பின்புதான் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
சென்னை:

கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறந்த ஒரு வாரத்திலேயே, அரசு பொது தேர்வுகள் குறித்த பட்டியலை கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்பட்டு 10 நாட்களுக்கு மேல் ஆகியும் இதுவரை அரசு பொது தேர்வுகள் தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.



எனவே இந்த தாமதம் தொடர்பாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில், ‘தேர்வு அட்டவணையில் சில மாற்றங்கள் இருக்கிறது. இதுபற்றி பொதுமக்களிடம் கருத்துகள் கேட்ட பின்புதான் வெளியிடப்படும்’ என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு பிளஸ்-1, பிளஸ்-2 பொது தேர்வுகளில் பல்வேறு மாற்றங்களை கல்வித்துறை கொண்டு வந்தது. உதாரணமாக கடந்த ஆண்டில் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வில் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றில் இருந்த முதல் மற்றும் 2-ம் தாள் தேர்வு முறை மாற்றப்பட்டது.

அந்தவகையில் இந்த ஆண்டும் சில மாற்றங்கள் இருக்கின்றன என்று அமைச்சர் கூறியிருக்கும் நிலையில், என்ன மாற்றங்களுடன் பொதுத்தேர்வு பட்டியல் வெளியாகுமோ? என்ற எதிர்பார்ப்பில் மாணவர்களும், ஆசிரியர்களும் காத்து இருக்கின்றனர்.

Tags:    

Similar News