செய்திகள்
மாணவிக்கு தெர்மல் பரிசோதனை

நீலகிரியில் 95 சதவீத மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகை

Published On 2021-01-20 03:22 GMT   |   Update On 2021-01-20 03:22 GMT
10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து நீலகிரியில் 95 சதவீத மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகை தந்தனர். அவர்கள் தெர்மல் பரிசோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.
ஊட்டி:

கொரோனா பாதிப்பால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டன. நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்காக நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் என மொத்தம் 218 பள்ளிகள் 10 மாதங்களுக்குப் பின்னர் திறக்கப்பட்டன.

முன்னதாக கொரோனா பரவலை தடுக்க பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு இருந்தது. ஊட்டி, நஞ்சநாடு, தூனேரி, அணிக்கொரையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகள், கோடப்பமந்து அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டது.

ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என்று தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களது பெயர், வெப்பநிலை உள்ளிட்ட விவரங்கள் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டது. புதிய பாடப்புத்தகங்களுடன் மாணவர்கள் வரிசையில் காத்திருந்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் பள்ளியில் மாணவர்களுக்கு தெர்மல் பரிசோதனை, முககவசம் அணிந்து உள்ளார்களா என்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வகுப்பறைகளில் மாணவ-மாணவிகள் சமூக இடைவெளி விட்டு அமர வைக்கப்பட்டனர். எந்த இடத்தில் உட்கார வேண்டும் என்பதற்காக, மேஜையில் பெயர் ஒட்டப்பட்டு இருந்தது.

அதற்கான இருக்கையில் மட்டும் அமர வேண்டும். அவர்கள் முககவசம் அணிந்து இருந்தனர். முதல் 3 நாட்கள் ஆசிரியர்கள் கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன் பின்னரே பாடம் நடத்தப்படுகிறது. அடிக்கடி கைகளை சுத்தப்படுத்திக்கொள்ள கிருமிநாசினி வைக்கப்பட்டு உள்ளது.

மதிய உணவு இடைவேளையின்போது உணவு சாப்பிட்ட பின்னர், முககவசத்தை உடனடியாக அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. நீலகிரியில் ஆசிரியர்கள் அந்தந்த வட்டாரங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் 218 பள்ளிகளில் 10-ம் வகுப்பு மாணவர்கள் 9, 636, 12-ம் வகுப்பு மாணவர்கள் 8, 398 என மொத்தம் 18, 034 பேர் உள்ளனர். நேற்று பள்ளிகளுக்கு 95 சதவீதம் பேர் வந்து இருந்தனர். 5 சதவீதம் பேர் வரவில்லை என்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோத்தகிரி பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் 100 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு ஆர்வத்துடன் வந்திருந்தனர். இதேபோல அரசு பள்ளிகளில் சுமார் 50 சதவீதக்கும் மேற்பட்ட மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வந்திருந்தனர். மாணவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர். மேலும் அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தது.

பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி தேவாலா உண்டு உறைவிட பள்ளியில் தமிழக அரசு கூறிய விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறாதா என்று மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார். கூடலூர் பகுதியில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகமாக காணப்பட்டது.

குறிப்பாக கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 8.30 மணி முதலே மாணவர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்றிருந்தனர். அவர்களை ஆசிரியர்கள் தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதனை செய்தனர். பின்னர் பதிவேடுகளில் பெயர் விவரங்களை சேகரித்து கொண்டு வகுப்பறைகளில் சமூக இடைவெளியை பின்பற்றி அமர வைத்தனர். மேலும் கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்ய வைத்தனர். இதேபோல் அனைத்துப் பள்ளிகளிலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டது.
Tags:    

Similar News