உள்ளூர் செய்திகள்
கோத்தகிரி நேரு பூங்காவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள வனவிலங்கு பொம்மைகளை படத்தில் காணலாம்.

கோடை விழா நாளை தொடக்கம்- கோத்தகிரியில் நாளை காய்கறி கண்காட்சி

Published On 2022-05-06 12:03 GMT   |   Update On 2022-05-06 12:03 GMT
சுற்றுலாபயணிகளின் வருகையையொட்டி நடை பாதைகள், மலர் செடிகள் மற்றும் பூங்காவை சுற்றிலும் மின் விளக்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கோத்தகிரி:

கோடை சீசனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் மலர் கண்காட்சி, காய்கறி கண்காட்சி, பழக்கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கோடை விழா நடத்தப்படவில்லை.

இந்த ஆண்டு மலர் கண்காட்சி உள்ளிட்ட அனைத்து கண்காட்சிகளும் நடத்த அரசு ஏற்பாடுகளை செய்தது. அதன்படி கோடை விழா காய்கறி கண்காட்சியுடன் நாளை (7ந் தேதி) தொடங்குகிறது.

கோத்தகிரியில் உள்ள நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி நாளை தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. கோத்தகிரி தோட்டக்கலைத்துறை மூலமாக கண்காட்சி அரங்குகள், பயன்படுத்தப்பட்ட டயர்கள் மூலம் காட்டு மாடு, மான், முயல், மயில், கொக்கு, வாத்து உள்ளிட்ட விழிப்புணர்வு பொம்மைகள் வைக்கப்பட்டு உள்ளன.

சுற்றுலாபயணிகளின் வருகையையொட்டி நடை பாதைகள், மலர் செடிகள் மற்றும் பூங்காவை சுற்றிலும் மின் விளக்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த காய்கறி கண்காட்சி இந்த ஆண்டு நடைபெறுவதால் சுற்றுலாபயணிகள் மட்டுமின்றி உள்ளூர் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கோடை விழாவில் முக்கிய நிகழ்ச்சியான ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர்க்கண்காட்சி வருகிற 20ந் தேதி தொடங்குகிறது. விழாவில் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். 

Tags:    

Similar News