செய்திகள்
கோப்புப்படம்

கேரளாவில் பாதிப்பு எதிரொலி- குமரியில் தினசரி 5 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை

Published On 2021-08-01 10:32 GMT   |   Update On 2021-08-01 10:32 GMT
குமரி மாவட்டத்தில் இதுவரை 57,969 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்துள்ளனர்.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்தனர்.

ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து பாதிப்பு குறையத் தொடங்கியது. தற்போது தினமும் 50-க்கு குறைவானவர்களே பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் 29 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குமரி மாவட்டத்தில் இதுவரை 57,969 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்துள்ளனர். தற்போது குமரி மாவட்டத்தையொட்டி உள்ள கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருவதால் குமரி மாவட்ட எல்லை பகுதியில் சுகாதாரத்துறையினரும், போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஆரல்வாய்மொழி சோதனை சாவடியிலும் சுகாதாரத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். நாகர்கோவில் மாநகர பகுதியில் சுகாதாரத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

வீடு வீடாகச் சென்று காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதியில் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 5,076 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. தினசரி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா சோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News