செய்திகள்
கோப்புபடம்

திருப்பூரில் தொழிலாளர் குடியிருப்பு வசதி - மத்திய, மாநில அரசு திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டுகோள்

Published On 2021-10-23 09:38 GMT   |   Update On 2021-10-23 10:53 GMT
தொழிலாளருக்கு ஏற்பட்டுவரும் வீட்டு வாடகை சுமைகள் நீங்கும். பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் ஏற்பட்டு வரும் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சினை விலகும்.
திருப்பூர்:
 
திருப்பூரில் தொழிலாளர் குடியிருப்பு வசதியை மத்திய, மாநில அரசு திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும் என முதன்மை செயலரிடம் ஏற்றுமதியாளர் சங்கம் முறையிட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகிகள் சென்னையில் தமிழக தலைமைச்செயலர் இறையன்பு, வீட்டு வசதி துறை செயலர் ஹிதேஷ் குமார் மக்வானா, குறு, சிறு நிறுவன துறை செயலர் அருண்ராய் ஆகியோரை சந்தித்தனர்.

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூறியதாவது:

திருப்பூரில் பல லட்சம் தொழிலாளர் வசிக்கின்றனர். இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, வீட்டு வசதி ஏற்படுத்துவது அவசியம். மத்திய அரசு, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் வீடு கட்டும் திட்டத்தை செயல்படுத்துகிறது. 

தொழில் கொள்கை மற்றும் ஜவுளி கொள்கையில் தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தும் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. திருப்பூரில், பனியன் தொழிலாளருக்கு வீட்டு வசதி ஏற்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசு திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும். 

பொருளாதார வசதியுள்ள தொழிலாளர் சுயமாக வீடு கட்டுவதற்கும், பொருளாதாரத்தில் பின் தங்கிய தொழிலாளர்களுக்கு அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் மூலமும் வீட்டு வசதி ஏற்படுத்தலாம். இதன் மூலம், தொழிலாளருக்கு ஏற்பட்டு வரும் வீட்டு வாடகை சுமைகள் நீங்கும். 

பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் ஏற்பட்டு வரும் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சினை விலகும். நிறுவனங்கள் புதிய முதலீடு இன்றி, தற்போது நிறுவியுள்ள எந்திரங்களை முழுமையாக பயன்படுத்தி ஆடை உற்பத்தியை பெருக்க முடியும்.

இதுகுறித்து, தலைமைச் செயலர் உள்ளிட்டோரிடம் மனு அளித்துள்ளோம். தொழிலாளர் குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தித்தர ஆவண செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர் என்றனர். 
Tags:    

Similar News