செய்திகள்
மேட்டூர் அணை

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் மேட்டூர் அணை வந்தடைந்தது

Published On 2021-06-23 05:33 GMT   |   Update On 2021-06-23 05:33 GMT
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரியில் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மேட்டூர்:

கேரளா மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

கர்நாடக அணைகளின் பாதுகாப்பு கருதி கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 5 ஆயிரம் கனஅடி, கபினி அணையிலிருந்து 5,283 கனஅடி என மொத்தம் 10ஆயிரத்து 283 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட உபரி நீர் நேற்று காலை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தமிழக பகுதியான ஒகேனக்கல்லை வந்தடைந்தது.

கடந்த சில நாட்களாக தமிழக காவிரி கரையோர பகுதிகளான பிலிகுண்டுலு, ஒகேனக்கல், அஞ்செட்டி, நாற்றாம்பாளையம் மற்றும் காவிரி கரையோரத்தை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் மழை பெய்து வந்ததால் அவ்வப்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.

கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று ஒகேனக்கல் வந்ததால் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. காலையில் 1200 கன அடியாக இருந்த நீர்வரத்து 10 மணி அளவில் 4 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. பின்னர் மாலையில் நீர்வரத்து 7 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர், ஒகேனக்கலை கடந்து மேட்டூர் அணைக்கு இன்று அதிகாலை வந்தடைந்தது. இதனால் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று காலை 686 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 2 ஆயிரத்து 376 கன அடியாக அதிகரித்தது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரியில் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 89.96 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 89.36 அடியாக குறைந்தது.

Tags:    

Similar News