செய்திகள்
அமைச்சர் காமராஜ்

ஒரே ரே‌ஷன் கார்டு திட்டத்தால் தமிழகத்தில் பாதிப்பு இல்லை - அமைச்சர் காமராஜ்

Published On 2019-09-09 05:19 GMT   |   Update On 2019-09-09 05:19 GMT
மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரே‌ஷன் கார்டு திட்டத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை:

‘ஒரே நாடு ஒரே ரே‌ஷன் கார்டு’ திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர உள்ளது. இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த திட்டத்தை தமிழக அரசியல் கட்சிகளும், எதிர்த்து வருகின்றன.

இந்தநிலையில் ஒரே நாடு ஒரே ரே‌ஷன் கார்டு திட்டத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது. என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு ஒரே ரே‌ஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர இருக்கிறது. இதுதொடர்பாக டெல்லியில் ஏற்கனவே உணவுத்துறை மந்திரி தலைமையில் கூட்டம் நடந்தது.

இந்த திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவந்தால் தமிழகத்தில் பொதுவினியோக திட்டத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது. ரே‌ஷன் கடைகளுக்கு தேவையான அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் 3 மாதத்துக்கு கையிருப்பு உள்ளது. எனவே வெளிமாநிலத்தவர்களுக்கு இங்குள்ள ரே‌ஷன் கடைகளில் பொருட்கள் வழங்கினாலும் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் வராது.

ஏனென்றால் மற்ற மாநிலத்தவர்களுக்கு கொடுக்கும் பொருட்களை மத்திய அரசு நமக்கு தந்து விடும். மத்திய அரசு தரும் பொருட்களையே ரே‌ஷன் கடைகளில் வினியோகம் செய்கிறோம்.

இதனால் தமிழகத்தில் இலவச ரே‌ஷன் அரிசி வழங்கும் திட்டத்திலும் எந்த பாதிப்பும் ஏற்படாது. இதே போல் பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி-சேலை மற்றும் பொங்கல் பரிசு பொருட்கள் வினியோகத்திலும் எந்த தடங்கலும் ஏற்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News