செய்திகள்
சசிகலா

சசிகலாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு- 1000 வாகனங்களில் தொண்டர்கள் பயணம்

Published On 2021-01-20 09:13 GMT   |   Update On 2021-01-20 09:13 GMT
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று சசிகலாவை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை:

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதைத்தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந்தேதி முதல் பெங்களூரு பரப்பனஅக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது தண்டனை காலம் முடிவடைவதை தொடர்ந்து வருகிற 27-ந்தேதி சசிகலா விடுதலையாவார் என்று சிறைத்துறை அறிவித்துள்ளது. இளவரசி அடுத்த மாதம் 5-ந்தேதியும், சுதாகரன் அபராத தொகை செலுத்தியதும் விடுதலை செய்யப்படுவார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலா விடுதலை ஆவதையொட்டி அ.ம.மு.க.வினர் மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து சசிகலாவை வரவேற்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை அவர்கள் செய்து வருகிறார்கள். சிறைத்துறை தகவல்படி சசிகலா 27-ந்தேதி காலை 10 மணிக்கு விடுதலை ஆவார் என தெரியவந்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அ.ம.மு.க.வினர் 26-ந்தேதியே பெங்களூருவுக்கு செல்கின்றனர்.

இதற்காக பெங்களூருவில் முக்கிய ஓட்டல்களில் அறைகள் பதிவு செய்துள்ளனர். இதேபோல் கர்நாடக -தமிழக எல்லை பகுதியான ஒசூர், சூளகிரி போன்ற இடங்களிலும் அனைத்து லாட்ஜுகளும் புக் ஆகி உள்ளன. சசிகலா வரவேற்பு ஏற்பாடுகள் குறித்து அ.ம.மு.க. நிர்வாகிகள் ரகசிய ஆலோசனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த அ.ம.மு.க.வினர் கிராமம் கிராமமாக சென்று கட்சியினரை சந்தித்து பேசி வருகின்றனர்.

இந்த 3 மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 1000-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று சசிகலாவை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக வேன்கள், சுற்றுலா வாகனங்கள், கார்கள் அனைத்தும் வாடகைக்கு பதிவு செய்துள்ளார்கள். வாகன எண்களோடு அவற்றை பதிவு செய்து உரிய சுங்க கட்டணத்தை செலுத்தும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

சசிகலா விடுதலை நாளுக்கு ஒரு நாள் முன்னதாகவே இந்த வாகனங்கள் பெங்களூருவுக்கு செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது. கர்நாடக எல்லையான ஓசூரிலிருந்து சென்னை வரை அ.ம.மு.க. நிர்வாகிகள் ஒவ்வொரு பகுதிக்கும் வரவேற்பு ஏற்பாட்டுக்காக பொறுப்பாளர்கள் நியமித்து உள்ளனர்.

அவர்கள் தங்கள் பகுதியில் பேனர்கள் வைப்பது, வாகனங்களில் திரண்டு முக்கிய இடங்களில் வரவேற்பு அளிப்பது என பிரமாண்ட ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். கர்நாடகாவின் கோலார் மாவட்ட அ.ம.மு.கவினர் பெங்களூரில் இருந்து தமிழக எல்லை வரை வழி நெடுக வரவேற்பு பதாகைகள் வைக்க திட்டமிட்டுள்ளனர்.

சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்ததும், ஒசூர் அருகே சூளகிரியில் ஒரு விடுதியில் சிறிதுநேரம் ஓய்வெடுத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

காலை 10 மணிக்கு விடுதலை ஆகும் சசிகலா 11 மணிக்கு சூளகிரிக்கு வந்து அங்கிருந்து மதியம் 12 மணிக்கு பின்னரே சென்னைக்கு புறப்படுகிறார் என அ.ம.மு.க.வினர் கூறுகிறார்கள்.

வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து இடங்களிலும் சசிகலா 5 நிமிடங்கள் நின்று கட்சியினர், பொதுமக்களின் வரவேற்பினை ஏற்று புறப்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அ.ம.மு.க. நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News