செய்திகள்
அசாருதீன்

அம்பதி ராயுடு விவகாரத்தில் தேர்வுக்குழு தலைவரின் விளக்கத்தை என்னால் ஏற்க முடியவில்லை: அசாருதீன்

Published On 2019-07-22 15:41 GMT   |   Update On 2019-07-22 15:41 GMT
தவான் மற்றும் விஜய் சங்கர் ஆகியோருக்கான மாற்று வீரர்கள் தேர்வில் தேர்வுக்குழு தலைவரின் விளக்கத்தை என்னால் ஏற்க முடியவில்லை என்று அசாருதீன் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அம்பதி ராயுடு இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டதால் அம்பதி ராயுடுவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் மாற்று வீரராக இருப்பார். இந்திய அணியில் யாராவது ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் அம்பதி ராயுடு சேர்த்துக் கொள்ளப்படுவார் என்று கூறப்பட்டது.

தவானுக்கு காயம் ஏற்பட்டபோது ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டார். விஜய் சங்கருக்கு காயம் ஏற்பட்டபோது  மயாங்க் அகர்வால் சேர்க்கப்பட்டார். இதனால் விரக்தியடைந்த அம்பதி ராயுடு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட பின் மாற்று வீரர்களாக ரிஷப் பந்த் மற்றும் மயாங்க் அகர்வால் சேர்க்கப்பட்டது ஏன்? என்பதற்கு தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் விளக்கம் அளித்தார்.

இடது கை பேட்ஸ்மேனான தவான் வெளியேறியதால் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கினார். இதனால் மிடில் ஆர்டர் வரிசையில் இடது கை பேட்ஸ்மேன் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதால் ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டார். இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின்போது லோகேஷ் ராகுலுக்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. ஒருவேளை அவரால் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் என்ன செய்வது? என்ற கேள்வி எழுந்ததால், மயாங்க் அகர்வால் சேர்க்கப்பட்டார் என்று எம்எஸ்கே பிரசாத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மாற்று வீரர்கள் தேர்வில் எம்எஸ்கே பிரசாத்தின் விளக்கத்தை என்னால் ஏற்க முடியவில்லை என்று முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முகமது அசாருதீன் கூறுகையில் ‘‘நீங்கள் மாற்று வீரராக ஒருவரை வைத்திருக்கும்போது, ஏதாவது ஒரு மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றால் மாற்று வீரராக வைத்திருககும் நபரைத்தான் தேர்வு செய்ய வேண்டும்.

ஒரு தேர்வுக்குழு தலைவராக நீங்கள் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் விருப்பத்தை மீறலாம். நீங்கள் உங்கள் கருத்தை அவர்களிடம் சொல்லலாம். நீங்கள் கூறியது கேட்க இயலாது. நாங்கள் இந்த வீரரைத்தான் அனுப்புவோம் என்று கூறலாம்.

நான் கேப்டனாக இருந்தபோது சில வீரர்களை விரும்பினேன். ஆனால் தேர்வாளர்கள் அவர்களை அணியில் சேர்க்க சம்மதம் தெரிவிக்கவில்லை. இது நடந்துள்ளது. அம்பதி ராயுடுவை மாற்று வீரராக தேர்வு செய்யவில்லை. இது கவலை அளிக்கிறது. இப்படி நடந்திருப்பதற்கு அவருடைய விளக்கம் ஏற்புடையதல்ல’’ என்றார்.
Tags:    

Similar News