செய்திகள்
காயமடைந்த வாலிபர் - பொள்ளாச்சி சப்-இன்ஸ்பெக்டர்

மோட்டார் சைக்கிள் மீது லத்தி வீசியதில் 3 பேர் காயம் - பொள்ளாச்சி சப்-இன்ஸ்பெக்டர் ‘சஸ்பெண்டு’

Published On 2019-11-05 10:23 GMT   |   Update On 2019-11-05 10:23 GMT
பொள்ளாட்சி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது லத்தியை தூக்கி வீசிய சப்-இன்ஸ்பெக்டரை சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
பொள்ளாச்சி:

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜாபர் அலி. இவரது மகன் சர்தார்(வயது 25). இவர் நகை கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது நண்பர்கள் போத்தனூரை சேர்ந்த ஷோன்பர்(18), குனியமுத்தூரை சேர்ந்த அப்சல்(17).

நண்பர்களான இவர்கள் 3 பேரும் நேற்று ஒரே மோட்டார் சைக்கிளில் ஆழியார் அணைக்கு பொள்ளாச்சி -வால்பாறை ரோடு, நா.மூ. சுங்கத்தில் இருந்து தென்சங்கம்பாளையம் வழியாக சென்றனர்.

அப்போது தென்சங்கம் பாளையத்தில் கோட்டூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சம்பந்தம் என்பவர் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சர்தாரின் மோட்டார் சைக்கிளை சம்பந்தம் நிறுத்தினார். ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக சென்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சம்பந்தம் தன் கையில் வைத்திருந்த லத்தியை தூக்கி மோட்டார் சைக்கிள் மீது வீசினார்.

இதில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி முன்னால் சென்ற சரக்கு வாகனம் மீது மோதியது. இதில் அவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் சர்தாருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்து அதிர்ச்சியான அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது லத்தியை தூக்கி வீசிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து தென்சங்கம் பாளையத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்ததும் வால்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள், இதுவரை இந்த பகுதியில் இருந்த போலீசார் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதில்லை. எனவே லத்தியை தூக்கி வீசி உயிரிழப்பு ஏற்படுத்த முயன்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் வாலிபர்கள் மீது லத்தியை வீசிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரிடம் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் அவர் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்கள் மீது லத்தியை வீசி உயிரிழப்பு ஏற்படுத்த முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து அவரை சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து வால்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமையிலான போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் சம்பந்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News