தொழில்நுட்பம்
ஒன்பிளஸ் டி.வி. டீசர்

செப்டம்பரில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் டி.வி.

Published On 2019-08-21 05:05 GMT   |   Update On 2019-08-21 05:05 GMT
ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய டி.வி. சீரிஸ் செப்டம்பர் மாதம் அறிமுகமாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



ஒன்பிளஸ் நிறுவனம் தொலைக்காட்சிகளை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவித்தது. இதைத் தொடர்ந்து புதிய டி.வி.க்களுக்கான பெயர் மற்றும் லோகோவினை கடந்த வாரம் வெளியிட்டது. அதில் புதிய மாடல் ஒன்பிளஸ் டி.வி. பெயரில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஒன்பிளஸ் தலைமை செயல் அதிகாரி பீட் லௌ ஒன்பிளஸ் டி.வி. செப்டம்பர் மாதம் அறிமுகமாகும் என தெரிவித்தார். புதிய டி.வி. முதற்கட்டமாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. அதன்பின் வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.

கடந்த இரு ஆண்டுகளாக ஒன்பிளஸ் நிறுவனம் டி.வி.யை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இது எங்களுக்கு மிகவும் முக்கியத்தும் வாய்ந்த சாதனம் என அவர் தெரிவித்தார். 



புதிய டி.வி.க்கென பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கும் நிறுவனங்களுடன் ஒன்பிளஸ் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சியோமி தனது டி.வி.யில் பேட்ச்வால் இன்டர்ஃபேஸ் மூலம் பொழுதுபோக்கு சார்ந்த தரவுகளை வழங்கி வருகிறது. 

“எங்களது குழுவினரின் கடும்முயற்சி மற்றும் நெவர் செட்டில் கோட்பாடிற்கு நன்றிகள். தலைசிறந்த அடித்தளம் ஒன்றை உருவாக்கி இருக்கிறோம். இதை கொண்டு ஒன்பிளஸ் டி.வி. அனுபவத்தை சிறப்பாக வழங்குவோம்,” என பீட் லௌ தெரிவித்தார்.

புதிய ஒன்பிளஸ் டி.வி. 4K ரெசல்யூஷனில் குவாண்டம் டாட் அல்லது QLED ஸ்கிரீன் பேனல்களை கொண்டிருக்கும் என்றும் இதில் கூகுளின் ஆண்ட்ராய்டு டி.வி. பிளாட்ஃபார்ம் வழங்கப்படும் என பீட் லௌ தெரிவித்தார். புதிய ஒன்பிளஸ் டி.வி. சாம்சங் QLED டி.வி. மாடல்களை விட விலை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News