செய்திகள்
லாரி

டீசல் விலை கடும் உயர்வு- லாரி வாடகை கட்டணம் 20 சதவீதம் அதிகரிக்கிறது

Published On 2021-02-23 04:49 GMT   |   Update On 2021-02-23 04:49 GMT
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு லாரிகளின் வாடகை கட்டணம் 20 சதவீதம் அதிகரிக்கப்பட உள்ளது.
சென்னை:

மத்திய அரசின் கலால் வரி உயர்வு, மாநில அரசின் மதிப்பு கூட்டு வரி அதிகரிப்பு ஆகியவற்றால் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது.

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகவும் பெட்ரோல், டீசல் விலை மிக மிக அதிகமாக உயர்ந்துள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் டீசல் லிட்டருக்கு ரூ.12 அதிகரித்துள்ளது. இதனால் அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு லாரிகளின் வாடகை கட்டணம் 20 சதவீதம் அதிகரிக்கப்பட உள்ளது.

இதன்காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் எஸ்.யுவராஜ் கூறியதாவது:-

கொரோனா ஊரடங்கு காரணமாக லாரி தொழில்கள் முடங்கி உள்ளன. இதற்கிடையே டீசல் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் லிட்டருக்கு ரூ.12 உயர்ந்துள்ளது.

டீசல் விலையை குறைக்க மத்திய-மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களுக்கு ஏற்பட்டுள்ள பெரிய நஷ்டத்தை ஈடு செய்ய முடியாத சூழ்நிலையில் சரக்கு லாரிகளின் வாடகை கட்டணத்தை 20 சதவீதம் அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். தமிழகத்தில் மொத்தம் உள்ள சரக்கு வாகனங்களில் 20 சதவீத வாகனங்களுக்கு கர்நாடகாவில் டீசல் வாங்கப்படுகிறது. காரணம் அங்கு லிட்டர் ரூ.2 குறைத்து விற்கப்படுகிறது.

தமிழக அரசும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2 குறைத்தால் ரூ.10 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும். இந்த கோரிக்கையை முதல்- அமைச்சரிடம் நேரில் வலியுறுத்த உள்ளோம்.

மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வருகிற 26-ந்தேதி ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதே போன்று மார்ச் 15-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்திலும் ஈடுபட இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

லாரி வாடகை உயர்த்தப்படுவது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

தமிழகத்துக்கு தேவையான பருப்பு, வெங்காயம், சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அதிக அளவில் வெளி மாநிலங்களில் இருந்து தான் லாரிகள் மூலம் கொண்டுவரப்படுகின்றன.

சரக்கு லாரிகளின் வாடகை கட்டணம் உயர்வதால் பொருட்களின் விலை 10 சதவீதம் வரை அதிகரிக்கும். வீட்டு உபயோக பொருட்கள் கொண்டு செல்லும் கனரக வாகனங்களின் வாடகையும் உயர்வதால் அதன் விலையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News