செய்திகள்
அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் 88 சதவீத கொரோனா நோயாளிகள் குணம் அடைந்தனர் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

Published On 2020-09-10 19:03 GMT   |   Update On 2020-09-10 19:03 GMT
தமிழகத்தில் 88 சதவீத கொரோனா நோயாளிகள் குணம் அடைந்து உள்ளதாக அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.
சென்னை:

சென்னை ராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் மாதிரி பரிசோதனைகளுக்காக ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்து அடிக்கடி மருத்துவ கல்லூரி வளாகத்துக்கு செல்லும் நர்சுகள், டாக்டர்களுக்கு பயன்படும் வகையில் ஸ்டான்லி ஆஸ்பத்திரி சுரங்கபாதைக்கு மேலே நடைபாதை மேம்பாலம் அமைக்கும் பணியை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

மேலும், கூடுதலாக ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 400 படுக்கை வசதி கொண்ட வார்டையும் திறந்து வைத்தார். கொரோனா தொடர் கண்காணிப்பு மையம், புதிய சி.டி.ஸ்கேன் கருவி உள்ளிட்ட ஆய்வு கூடங்களையும், யோகா மையத்தையும் திறந்து வைத்தார்.

அப்போது, சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், தேசிய நலவாழ்வு மைய மேலாண்மை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி டீன் பாலாஜி, நிலைய மருத்துவ அதிகாரி ரமேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

ஆய்வுக்கு பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் ஒரு நாளைக்கு 85 ஆயிரம் கொரோனா (ஆர்.டி.பி.சி. ஆர்.) பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை 55 லட்சத்து 44 ஆயிரத்து 850 பரிசோதனைகள் மேற்கொண்டு இந்தியாவிலேயே அதிக பரிசோதனைகள் செய்யப்பட்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகம் முழுவதும் 88 சதவீத கொரோனா நோயாளிகள் குணம் அடைந்துள்ளனர்.

ஏற்கனவே ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் 800 படுக்கைகள் உள்ள நிலையில், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய மேலும் 400 படுக்கைகள் தற்போது அர்ப்பணிக்கப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு தற்போது 1 லட்சத்து 42 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி, கடலூரில் மட்டுமே 10 சதவீதத்திற்கு அதிகமான கொரோனா பாதிப்பு உள்ளது. இதனை ஓரிரு நாளில் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுவதற்காகவே முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கை கொண்டு வந்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஸ்டான்லி மருத்துவமனையில் ஆய்வு பணியின் போது, அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனடி காசநோய் பரிசோதனை கருவியின் மூலம் தங்களுக்கு பரிசோதனை செய்து கொண்டனர்.
Tags:    

Similar News