ஆன்மிகம்
திருத்தணி முருகன் கோவில்

திருத்தணி முருகன் கோவிலில் இன்று புஷ்பாஞ்சலி: பக்தர்கள் அமர்ந்து தரிசனம் செய்ய அனுமதி இல்லை

Published On 2021-11-09 08:38 GMT   |   Update On 2021-11-09 08:38 GMT
ஆறுபடை வீடுகளில் முருகன் கோவில்களில் கடைசி நாளில் சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால் திருத்தணி கோவிலில் மட்டும் புஷ்பாஞ்சலி நடக்கும்.
ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா ஏழு நாட்கள் நடைபெறும்.

திருத்தணி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 4-ந் தேதி துவங்கியது. அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் உற்சவர் சண்முகர் சிறப்பு அலங்காரத்தில் காவடி மண்டபத்தில் எழுந் தருளினார்.

அதனைத் தொடர்ந்து உற்சவர் சண்முகர் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கொரோனா தொற்று காரணமாக உற்சவர் சண்முகருக்கு லட்சார்ச்சனை நடத்தப்படவில்லை.

மேலும் இன்று அதிகாலை மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் அரக்கோணம் சாலையில் உள்ள அருள்மிகு சுந்தர விநாயகர் ஆலயத்திலிருந்து ஊர்வலமாக உற்சவர் சண்முகப் பெருமாள் காவடி மண்டபத்தில் எழுந்தருள்வார்.

அதனைத் தொடர்ந்து மாலையில் சண்முகப் பெருமானுக்கு பல்வேறு மலர்களால் புஷ்பாஞ்சலியும், மகா தீபாராதனை நடைபெறும். நாளை காலை முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணமும் நடைபெறும்.

புஷ்பாஞ்சலி மற்றும் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சிகளில் பக்தர்கள் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இதற்கு மாறாக பக்தர்கள் வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

புஷ்பாஞ்சலி மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் அனைத்தும் திருக்கோவில் யூடியூப்சேனல் மற்றும் இணைத்தளம் மூலம் நேரடி ஒளி பரப்பு செய்ய கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

ஆறுபடை வீடுகளில் முருகன் கோவில்களில் கடைசி நாளில் சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால் திருத்தணி கோவிலில் மட்டும் புஷ்பாஞ்சலி நடக்கும். முருகப்பெருமான் சினம் தணிந்து வள்ளியை திருமணம் செய்ததால் புஷ்பாஞ்சலி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News