ஆன்மிகம்
முத்தங்கி அலங்காரத்தில் திரி நேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு: திரளான பக்தர்கள் தரிசனம்

Published On 2020-09-18 04:02 GMT   |   Update On 2020-09-18 04:02 GMT
பொறையாறு அருகே உள்ள அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோவிலில் மகாளய அமவாசை சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை அருகே உள்ள பொறையாறை அடுத்துள்ள அனந்தமங்கலம் கிராமத்தில் ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தனி சன்னதியில் பிரசித்தி பெற்ற திரிநேத்ர தச புஜ வீர ஆஞ்சநேயர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விஷ்ணு, ருத்ரன், பிரம்மா, சக்தி, ராமர், கிருஷ்ணர், ராஜகோபாலசாமி மற்றும் கருடன் ஆகியோர் ஆசியுடன் பரமசிவன் கொடுத்த நெற்றிக் கண்ணையும் சேர்த்து மூன்று கண்ணுடன் 10 கைகளில் சங்கு, சக்கரம், சூலம், கபாலம், மக்தாட்சகம், பாசமங்குசம், வில், அம்பு, சாட்டை, நவநீதம் ஆகியவற்றை கரங்களில் ஏந்தி முதுகின் இரு பக்கங்களிலும் கருடனுக்குரிய சிறகுகளோடு எழுந்தருளி காட்சி தருகிறார்.

இதுபோன்ற திரி நேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் திருமேனி உலகில் வேறு எங்கும் இல்லை. அனந்தமங்கலம் கோவிலில் மட்டுமே உள்ளது தனி சிறப்பாகும். இந்த ஆஞ்சநேயரை வழிபட்டால் திருமால், சிவபெருமான், பிரம்மா, ராமர், இந்திரன், ருத்ரன், கருடாழ்வார் ஆகிய அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பதால் இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

வியாழன், சனிக்கிழமைகளிலும் கேட்டை, மூலம் ஆகிய நட்சத்தி நாட்களிலும் அமாவாசை திதியிலும் பக்தர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு மனநிறைவுடன் செல்கின்றனர். பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவு செய்யும் வகையில் ஆஞ்சநேயருக்கு பிடித்த வெற்றிலை மாலை, துளசி மாலை, வடை மாலை, எலுமிச்சம்பழ மாலை ஆகியவற்றை சாற்றி வழிபடுகின்றனர்.

வெண்ணெய் சாற்றி வழிபட்டால், துன்பங்கள் வெப்பம் பட்ட வெண்ணெய்யை போல் உருகிப் போகும் என்பதாலும, மங்கள காரியங்கள் நடக்க வேண்டும் என்பதால் குங்குமத்தினால் அர்ச்சனை செய்தும், சர்க்கரை பொங்கல், புளியோதரை, தயிர் சாதம், சுண்டல், வடை மாலை ஆகிய பிரசாதங்கள் வைத்தும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்கின்றனர்.

இப்படி பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் நேற்று மகாளய அமாவாசையையொட்டி திரி நேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயருக்கு தேன், பால், சந்தனம், தயிர், வெண்ணெய், பன்னீர் உள்ளிட்ட திரவியம் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து முத்தங்கி உள்ளிட்ட சிறப்பு அலங்காரத்திற்கு பின் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், சீர்காழி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News