செய்திகள்
தமிழக அரசு

மெரினா கடற்கரையை திறப்பது குறித்து அடுத்த மாதம் முடிவு- தமிழக அரசு தகவல்

Published On 2020-11-19 03:13 GMT   |   Update On 2020-11-19 10:54 GMT
மெரினா கடற்கரையை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறப்பது குறித்து வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்துக்குள் முடிவெடுக்கப்படும் என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை:

மீனவர்கள் பாதுகாப்பு சங்கம் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரிக்கும் சென்னை ஐகோர்ட்டு, மெரினா கடற்கரையை தூய்மைப்படுத்துவது, புயலில் சேதமடைந்த பெசன்ட் நகர் லூப் சாலையை புனரமைப்பது, மீன் கடைகளை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. இந்த உத்தரவை அமல்படுத்தி, அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, மெரினா கடற்கரையை பொதுமக்களுக்காக திறப்பதில் தாமதம் ஏற்படுவது ஏன்? என கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எம்.எஸ்.ரமேஷ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ராஜகோபால், இம் மாதம் இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், மெரினா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பது தொடர்பாக வரும் டிசம்பர் முதல் வாரத்துக்குள் முடிவெடுத்து தெரிவிக்கப்படும் என்று கூறினார்.

அதற்கு நீதிபதிகள், “டிசம்பர் முதல் வாரத்துக்குள் அரசு முடிவு எடுக்காவிட்டால், நீதிமன்றமே உரிய உத்தரவு பிறப்பிக்கும்” என தெரிவித்தனர்.

மெரினா கடற்கரையில் தள்ளுவண்டி கடைகளுக்கான ஒப்பந்தப்புள்ளியைத் திறக்க தனி நீதிபதி தடை விதித்த வழக்கை நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்தனர். பின்னர், 900 தள்ளுவண்டி கடைகளுக்கான ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், லூப் சாலை மற்றும் மீன் சந்தைகளை முறைப்படுத்துவது தொடர்பாக 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை வருகிற டிசம்பர் 3-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Tags:    

Similar News