செய்திகள்
டெங்கு காய்ச்சல்

தமிழகம் முழுவதும் 2,951 பேருக்கு டெங்கு காய்ச்சல் - சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

Published On 2019-10-08 08:29 GMT   |   Update On 2019-10-08 08:29 GMT
தமிழகம் முழுவதும் இதுவரை டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 2951 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

ராயபுரம்:

சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று காலை காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் சந்தித்து அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டு அறிந்தார். பின்னர் அவர் ஆஸ்பத்திரியில் உள்ள வார்டுகளை ஆய்வு செய்தார். அப்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.


இதைத் தொடர்ந்து பீலா ராஜேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் இதுவரை டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 2951 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு காய்ச்சலால் எந்த உயிரிழப்பும் ஏற்படக்கூடாது என்ற வகையில் செயல்படுவது தான் அரசின் இலக்கு.

டெங்கு காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டால் முதல் ஐந்து நாட்கள் வரை பெரிய அளவில் பாதிப்பு இருக்காது ஐந்து நாட்களுக்குப் பிறகு தான் பாதிப்பு ஏற்படும் அதனால் அதற்குள் அதற்கான சிகிச்சையை பொதுமக்கள் எடுக்க வேண்டும்.

சென்னையை பொறுத்தவரையில் வடசென்னையில் பாதிப்பு அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த பகுதியில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.

டெங்கு காய்ச்சலால் இதுவரை தமிழகத்தில் ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார். விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News