செய்திகள்
கியாஸ் சிலிண்டர் விபத்து

ஈரானில் லாரியில் எடுத்துச்செல்லப்பட்ட கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து 217 பேர் படுகாயம்

Published On 2020-09-06 00:50 GMT   |   Update On 2020-09-06 00:50 GMT
ஈரானில் லாரியில் எடுத்துச்செல்லப்பட்ட கியாஸ் சிலிண்டர்கள் வெடித்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் 217 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெஹ்ரான்:

ஈரானின் மேற்கு பகுதியில் உள்ள இலம் மாகாணத்தில் இருந்து குளோரின் கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு ஈராக்குக்கு கன்டெய்னர் லாரி ஒன்று புறப்பட்டது.

இந்த லாரி நேற்று முன்தினம் இரவு இலம் மாகாணத்தில் உள்ள சஞ்ஜிரா என்ற கிராமத்துக்கு அருகே நின்று கொண்டிருந்த போது கன்டெய்னரில் இருந்த கியாஸ் சிலிண்டர்கள் திடீரென வெடித்துச் சிதறின.

அடுத்தடுத்து கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதில் கன்டெய்னர் லாரியில் தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது. இதில் அந்த பகுதியில் கரும் புகை மண்டலம் உருவானது.

கன்டெய்னர் லாரி நிறுத்தப்பட்டிருந்த சாலையில் சென்று கொண்டிருந்த பலர் இந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர். மேலும் சிலிண்டர்களில் இருந்து கசிந்த குளோரின் வாயு காற்றில் கலந்தது. இதை சுவாசித்த மக்களுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன.

தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மற்றும் கியாஸ் கசிவால் சுவாச பிரச்சினைக்கு ஆளானவர்கள் என 217 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். லாரி டிரைவரின் அலட்சியத்தால் அந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. எனவே போலீசார் லாரி டிரைவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News