செய்திகள்
அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தல் அறிவிப்புக்கு முன் திமுக- காங்கிரஸ் கூட்டணி உடைய வாய்ப்பு உள்ளது: அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2021-02-22 11:33 GMT   |   Update On 2021-02-22 11:33 GMT
தமிழகத்தில் தேர்தல் அறிவிப்புக்கு முன் திமுக- காங்கிரஸ் கூட்டணி உடைய வாய்ப்பு உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. அப்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் இடம் பிடித்திருந்தன. அதிமுக கூட்டணியில் பா.ஜனதா, பா.மக.,  தேமுதிக இடம் பிடித்திருந்தன.

தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் வர இருக்கிறது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி அப்படியே நீடித்து தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் அதிமுக கூட்டணியில் இருந்த பா.ம.க. மற்றும் தேமுதிக தொடர்ந்து கூட்டணியில் நீடிக்குமா? என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இதற்கிடையே கமல் ஹாசன் 3-வது அணியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் உலாவருகின்றன. நேற்று இதை உறுதி செய்யும் வகையில் 3-வது அணி உருவாக வாய்ப்புள்ளது என கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

பாண்டிச்சேரியில் காங்கிரஸ்- திமுக இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்து வந்த நிலையில், திமுக எம்.எல்.ஏ. ஒருவரும் ராஜினாமா செய்தார்.

தேர்தல் வரை திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடருமா? என்ற சந்தேகம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதற்கு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பேச்சும் ஒரு சான்றாக உள்ளது.

இந்த நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் ‘‘தமிழகத்தில் தேர்தல் அறிவிப்புக்கு முன், திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் அதிமுக கூட்டணி பலமாக இருக்கிறது’’ எனத் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News