செய்திகள்
சுதாகர், ஸ்ரீராமுலு

கர்நாடகத்தில் 3 மந்திரிகளின் இலாகா திடீர் மாற்றம்

Published On 2020-10-13 02:13 GMT   |   Update On 2020-10-13 02:13 GMT
கர்நாடகத்தில் 3 மந்திரிகளின் இலாகா திடீரென்று மாற்றப்பட்டது. தன்னிடம் இருந்து சுகாதாரத் துறை பறிக்கப்பட்டதால் முதல்-மந்திரி எடியூரப்பாவை சந்தித்து ஸ்ரீராமுலு அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
பெங்களூரு :

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் கடந்த மார்ச் மாதம் பரவத்தொடங்கியது. கொரோனா தடுப்பு நிர்வாக பணிகளை கர்நாடக அரசு மேற்கொண்டு வருகின்றது. இந்த பணிகளை மேற்கொள்வதில் சுகாதாரத்துறை மற்றும் மருத்துவக் கல்வித் துறை மந்திரிகள் இடையே அவ்வப்போது கருத்துவேறுபாடு ஏற்பட்டு வந்தது. கொரோனோ தடுப்பு நிர்வாக பணிகள் மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு கடும் அதிருப்தி அடைந்தார்.

மேலும் கொரோனா தடுப்பு நிர்வாக பணிகளை மேற்கொள்ள 4 மந்திரிகள் அடங்கிய செயல்படை ஒன்று அமைக்கப்பட்டது. அதில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு, மருத்துவ கல்வித் துறை மந்திரி சுதாகர், போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோர் இடம் பெற்றனர்.

இதில் கொரோனா தடுப்பு குறித்து அவ்வப்போது ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு தொடர்பான அனைத்து பணிகளையும் மருத்துவக் கல்வித் துறை மந்திரி சுதாகர் மேற்கொண்டு வருகிறார். கர்நாடக சட்டசபையில் கொரோனோ தொடர்பாக நடைபெற்ற விவாதத்திற்கு சுதாகர் தான் பதிலளித்தார். இதனால் மந்திரி ஸ்ரீராமுலு அதிருப்தியில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் கர்நாடகத்தில் 3 மந்திரிகளின் இலாகா திடீரென்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஸ்ரீராமுலு வசம் இருந்த சுகாதாரத்துறை பறிக்கப்பட்டுள்ளது. அந்த துறை மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகருக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் மந்திரி ஸ்ரீராமுலுக்கு சமூகநலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சமூக நலத்துறை துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோளிடம் இருந்தது. மேலும் ஸ்ரீராமுலுவிடம் இருந்த இன்னொரு துறையான பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையை முதல்-மந்திரி எடியூரப்பா தன்வசம் எடுத்துக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இலாகா மாற்றத்திற்கு கவர்னர் வஜூபாய் வாலா ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இதுதொடர்பான அறிவிப்பு வெளியானதும் மந்திரி ராமுலு தன்னிடம் இருந்த 2 துறை பறிக்கப்பட்டது மற்றும் தனக்கு சமூகநலத்துறை ஒதுக்கியதற்கும் கடும் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் சிறிது நேரத்தில் முதல்-மந்திரி எடியூரப்பாவை அவரது காவேரி இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினார்.

அப்போது, ஸ்ரீராமுலு, தன்னிடம் இருந்த துறையை பறித்தது சரியல்ல என்று கூறி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

அதற்கு எடியூரப்பா, கொரோனா பணிகளை நிர்வகிக்க வேண்டியிருப்பதால், சுகாதாரத்துறையும், மருத்துவ கல்வித்துறையும் ஒருவரிடமே இருப்பது நல்லது என்று கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறி அவரை சமாதானப்படுத்தியதாக தெரிகிறது.

தனக்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள சமூக நலத்துறை பணிகளில் யாருடைய தலையீட்டையும் அனுமதிக்காதீர்கள் என்று அவர் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. சுமார் 15 நிமிடங்கள் சந்திப்புக்கு பிறகு மந்திரி ஸ்ரீராமுலு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
Tags:    

Similar News