செய்திகள்
கோப்புப்படம்

திருப்பூர் மாவட்டத்தில் டெபாசிட் இழந்த 121 வேட்பாளர்கள்

Published On 2021-05-03 20:53 GMT   |   Update On 2021-05-04 12:15 GMT
திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் திருப்பூரில் உள்ள எல்.ஆர்.ஜி. அரசு பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட 121 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் திருப்பூரில் உள்ள எல்.ஆர்.ஜி. அரசு பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது. இதில் 5 தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்களும், 3 தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர்.

தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அவர்கள் போட்டியிட்ட தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் 6-ல் ஒரு பங்கு வாக்கு பெற்றவர்கள் டெபாசிட் பெறும் தகுதி உடையவர்கள். அதற்கு குறைவாக வாக்கு பெற்றவர்கள் டெபாசிட்டை இழப்பார்கள் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன்படி தாராபுரம் தொகுதியில் 1,94,505 வாக்குகள் பதிவானது. இதில் தி.மு.க. வேட்பாளர் கயல்விழி 89,986 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தமிழக பா. ஜனதா தலைவரும், பா.ஜனதா வேட்பாளருமான எல்.முருகன் 88,593 அவர்கள் பெற்று தோல்வி அடைந்தார். இந்த இரண்டு பேரையும் தவிர மீதமுள்ள 12 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.

அவினாசி தொகுதியில் 2,13,025 வாக்குகள் பதிவானது. இதில் அ.தி.மு.க. வேட்பாளர் ப.தனபால் 1,17,284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க. வேட்பாளர் அதியமான் ராஜு 66,442 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். இவர்கள் இரண்டு பேரையும் தவிர மீதமுள்ள 10 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.

காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் 2,00,376 வாக்குகள் பதிவானது. தி.மு.க. வேட்பாளர் மு.பெ.சாமிநாதன் 94,197 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.எஸ்.ராமலிங்கம் 86,866 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இரண்டு பேரையும் தவிர மீதமுள்ள 24 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

பல்லடம் தொகுதியில் 2,61,609 வாக்குகள் பதிவானது. அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன் 1,26,903 வாக்குகள் வெற்றி வெற்றி பெற்றார். தி.மு.க. வேட்பாளர் முத்துரத்தினம் 94,212 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். மீதமுள்ள 18 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளார்கள்.

திருப்பூர் வடக்கு தொகுதியில் 2,38,100 வாக்குகள் பதிவானது. அ.தி.மு.க. வேட்பாளர் கே.என்.விஜயகுமார் 1,13,384 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் ரவி என்ற சுப்ரமணியன் 73,282 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். மீதமுள்ள 13 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்திருக்கிறார்கள்.

திருப்பூர் தெற்கு தொகுதியில் 1,74,536 வாக்குகள் பதிவானது. தி.மு.க. வேட்பாளர் செல்வராஜ் 75,535 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் குணசேகரன் 70,826 வாக்குகள் வெற்றி தோல்வி அடைந்தார். மீதமுள்ள 18 பேர் டெபாசிட்டை இழந்திருக்கிறார்கள்.

மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் 1,81,913 வாக்குகள் பதிவானது. அ.தி.மு.க. வேட்பாளர் மகேந்திரன் 84,313 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க. வேட்பாளர் ஜெய ராமகிருஷ்ணன் 77,875 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார். மீதமுள்ள 13 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.

உடுமலை தொகுதியில் 1,94,657 வாக்குகள் பதிவானது. அ.தி.மு.க. வேட்பாளர் உடுமலை கே‌.ராதாகிருஷ்ணன் 96,893 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் தென்னரசு 74, 998 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். மீதமுள்ள 13 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் 137 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் பிரதான கட்சியை சேர்ந்த முதல் இரண்டு இடங்களைப் பிடித்தவர்கள் மட்டுமே டெபாசிட் இழக்காமல் உள்ளனர். மீதமுள்ள வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர். அதன்படி மொத்தம் 121 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
Tags:    

Similar News