செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

நில எடுப்பு வழக்கு தீர்ப்புகள் சர்ச்சை - சமூக ஊடகங்கள் மீது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பாய்ச்சல்

Published On 2019-10-15 22:42 GMT   |   Update On 2019-10-16 00:46 GMT
நில எடுப்பு வழக்கு தீர்ப்புகள் சர்ச்சை தொடர்பாக சமூக ஊடகங்கள் மீது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
புதுடெல்லி:

நில எடுப்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் 2 அமர்வுகள் மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கின. இதில் சர்ச்சை எழுந்தது. அதைத் தொடர்ந்து இந்த 2 தீர்ப்புகளின் சரியான தன்மையை 5 நீதிபதிகள் அமர்வு ஆய்வு செய்யும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது.

இதையடுத்து நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் அமர்வு அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஒரு அரசு நிறுவனம் நிலம் எடுப்பதற்காக அளித்த இழப்பீட்டை நில உரிமையாளர் ஏற்றுக்கொள்வதில் ஏற்படுகிற தாமதம் காரணமாக, நிலம் எடுத்ததை ரத்து செய்ய முடியாது என ஏற்கனவே தீர்ப்பு வழங்கிய அமர்வில் நீதிபதி அருண் மிஸ்ரா இடம் பெற்றிருந்தார்.

எனவே 5 நீதிபதிகள் அமர்வில் இருந்து நீதிபதி அருண் மிஸ்ரா விலக வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பதிவுகளும், கட்டுரைகளும் வெளியானதாக தெரிகிறது.

இந்த நிலையில், அந்த வழக்கு நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி அருண் மிஸ்ரா, தான் இந்த விசாரணையில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் எழுதுவதற்கு கண்டனம் தெரிவித்தார்.

அப்போது அவர், “இது ஒரு குறிப்பிட்ட நீதிபதிக்கு எதிரானது மட்டுமல்ல. சுப்ரீம் கோர்ட்டையே இழிவுபடுத்தும் முயற்சி” என சாடினார்.

மேலும், “எனது கருத்துக்காக என்னை விமர்சிக்கலாம். நான் ஒரு ஹீரோவாக இல்லாமல் இருக்கலாம். நான் கறை படிந்த நபராக இருக்கலாம். ஆனால் என் மனசாட்சி தெளிவாக இருக்கிறது. கடவுளுக்கு முன்னால் நான் நேர்மையானவன். எந்த ஒரு புற காரணிகளாலும், நான் செல்வாக்கு செலுத்தப்படுவேன் என நினைத்தால், நான்தான் முதலில் விலகுவேன்” என கூறினார்.
Tags:    

Similar News