செய்திகள்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.

அ.தி.மு.க.வுக்கும் சசிகலாவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை- எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

Published On 2021-06-18 02:50 GMT   |   Update On 2021-06-18 02:50 GMT
கொரோனா தொற்றால் இறந்தவர்களுக்கு, வேறு காரணங்களால் இறந்தார்கள் என்று இறப்பு சான்றிதழ் தருவதாக மாநிலம் முழுவதும் பல்வேறு புகார்களை பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
சேலம்:

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அ.தி.மு.க. புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் செம்மலை, ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோவன், சந்திரசேகர் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மணி, நல்லதம்பி, சித்ரா, ராஜமுத்து, ஜெய்சங்கரன், பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சசிகலாவை கண்டிப்பது உள்பட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

பல கட்சி கூட்டணி, பல ஆயிரம் கோடி செலவு, பகட்டான வாக்குறுதிகள், பசுந்தோல் போர்த்திய புலிகளாய் பகல் வேஷம் என்ற பரிவாரங்களுடன் வந்து மக்களிடம் நாடகமாடி தேர்தலை சந்தித்து தி.மு.க. மற்றும் எதிர் அணியினர் சட்டமன்ற தேர்தலில் மிக குறைந்த வாக்கு சதவீதத்தில் தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

சூழ்ச்சிகள், தந்திரங்கள், சதி செயல்கள் அனைத்தையும் முறியடித்து மக்களின் பேரன்பை பெற்று அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியாக, அ.தி.மு.க.வில் 66 எம்.எல்.ஏ.க்கள் தமிழகத்தின் நலனுக்காக சட்டமன்றத்தில் உரக்க குரல் எழுப்பி உண்மை மக்கள் தொண்டர்களாக பணியாற்ற துடித்து கொண்டிருக்கின்றனர்.

சட்டமன்ற தேர்தலின்போது, தான் அரசியலில் இருந்து முழுமையாக விலகி இருப்பதாக ஊடகங்கள் மூலம் சசிகலா பகிரங்கமாக அறிவித்தார். ஆனால் அவர் சட்டமன்ற தேர்தல் முடிவிற்கு பிறகு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரது தலைமையில் அ.தி.மு.க. இவ்வளவு வலுவும், தொண்டர் பெரும்படையும், மக்கள் செல்வாக்கும் பெற்றிருப்பதை பார்த்ததும், அரசியலில் முக்கியத்துவத்தை தேடி கொள்ள அ.தி.மு.க.வை அபகரிக்கும் முயற்சியில் இறங்கப்போவதாக ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன் பேசுவதாக வினோதமான ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.

மேலும் சசிகலா அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லை. சசிகலா தொலைபேசியில் சாதிய உணர்வுகளை தூண்டும் விதமாக பேசுவது, ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாக வாழ்ந்து வரும் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். மேலும் அ.தி.மு.க.விற்கும், சசிகலாவிற்கும் எந்தவித தொடர்போ, சம்பந்தமோ இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

சசிகலாவிடம் தொலைபேசியில் பேசிய அனைவரையும் அ.தி.மு.க.வில் இருந்து உடனடியாக நீக்கியதை சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வரவேற்கிறோம்.

கொரோனா தொற்றால் இறந்தவர்களுக்கு, வேறு காரணங்களால் இறந்தார்கள் என்று இறப்பு சான்றிதழ் தருவதாக மாநிலம் முழுவதும் பல்வேறு புகார்களை பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் கொரோனா நோய் தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கும் நலத்திட்ட உதவிகள் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே கோர்ட்டு அறிவுரையின்படி கொரோனா நோய் தொற்றால் இறந்தவர்களின் இறப்பு சான்றிதழில் உண்மையான காரணத்தை குறிப்பிட வேண்டும்

கொரோனா நோய் தொற்று மற்றும் கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருந்துகளை உடனுக்குடன் வழங்கி நோய் தொற்றில் இருந்து அனைவரும் விரைவில் குணமடைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
Tags:    

Similar News