செய்திகள்
மதுரை ஐகோர்ட்

குற்ற வழக்குகளில் சாட்சியங்களை ஆடியோ- வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்- ஐகோர்ட்டு கிளை உத்தரவு

Published On 2019-11-29 10:25 GMT   |   Update On 2019-11-29 11:47 GMT
குற்ற வழக்குகளில் சாட்சிகள் பிறழ்சாட்சியாக மாறுவதால் குற்றவாளிகள் விடுதலையாவதைத் தடுக்க சாட்சிகளின் வாக்கு மூலத்தை ஆடியோ, வீடியோவில் பதிவு செய்ய மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

குற்ற வழக்குகளில் சாட்சிகள் பிறழ்சாட்சியாக மாறுவதால் குற்றவாளிகள் விடுதலையாவதைத் தடுக்க சாட்சிகளின் வாக்கு மூலத்தை ஆடியோ, வீடியோவில் பதிவு செய்ய மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு ஆலோசனை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், பிறழ்சாட்சியால் குற்றவாளிகள் விடுதலையாவதை அனுமதித்தால் குற்றவியல் நீதிமுறையின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை குறைந்துவிடும்.

எனவே சாட்சிகள் வாக்கு மூலத்தை ஆடியோ அல்லது வீடியோ பதிவு செய்யலாம் என குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்தச் சட்டம் 2009-ல் நடைமுறைக்கு வந்தபோதும் கடந்த 10 ஆண்டுகளாக சாட்சிகள் வாக்கு மூலம் பதிவு செய்யப்படவில்லை.

வாக்குமூலத்தை ஆடியோ, வீடியோவில் பதிவு செய்யும்போது அந்த சாட்சிகள் பிறழ்சாட்சியாக மாறுவதற்கு பலமுறை யோசித்து செயல்படுவர்.

எனவே எதிர்காலத்தில் அனைத்து வழக்குகளிலும் சாட்சிகளின் வாக்கு மூலத்தை ஆடியோ அல்லது வீடியோவில் பதிவு செய்யும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளை, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் பலரிடம் கருத்து கேட்டனர்.

காவல்துறை உயர் அதிகாரிகளும் நேரில் ஆஜராகி வாக்குமூலத்தை ஆடியோ, வீடியோவில் பதிவு செய்வதால் ஏற்படும் சாதக, பாதகங்களைத் தெரிவித்தனர்.

இது தொடர்பாக நீதிபதி கள் எஸ்.வைத்திய நாதன், ஆனந்த் வெங்கடேஷ் இன்று உத்தரவு பிறப்பித்தனர். அதில், குற்ற வழக்குகளில் சாட்சிகள் பிறழ்சாட்சியாக மாறாமல் இருக்க குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் மாவட்ட நீதிமன்றம், மகிளா நீதிமன்றம் மற்றும் கீழ் நீதிமன்றங்களில் முக்கிய வழக்குகளில் சாட்சிகள் வாக்குமூலத்தை ஆடியோ, வீடியோ பதிவு செய்ய வேண்டும்.

குறிப்பாக 10 ஆண்டு அல்லது அதற்கு மேல் தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளில் சாட்சிகள் வாக்குமூலத்தை கட்டாயம் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்.

நீதிமன்றங்களில் சாட்சிகளின் வாக்குமூலத்தை ஆடியோ, வீடியோவில் பதிவு செய்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு 3 மாதத்துக்குள் செய்து தர வேண்டும். இது தொடர்பாக ஏப்ரல் 1-ந் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
Tags:    

Similar News