செய்திகள்
திருநாவுக்கரசர்

மத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி

Published On 2019-08-19 15:08 GMT   |   Update On 2019-08-19 15:08 GMT
ப.சிதம்பரம் மோடியை ஆதரித்து பேச எந்த ஒரு நிர்பந்தமும் இல்லை, பயமும் இல்லை என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை:

சுதந்திர போராட்ட வீரரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சத்தியமூர்த்தியின் பிறந்த நாளையொட்டி புதுக் கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு பால் விலையை அதிகமாக உயர்த்தியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. ப.சிதம்பரம் மோடியை ஆதரித்து பேச எந்த ஒரு நிர்பந்தமும் இல்லை, பயமும் இல்லை. விமர்சனம் செய்யும் போது தவறுகளை மட்டுமே சுட்டிக்காட்ட வேண்டியதில்லை. அரசு நல்லது செய்தால் அதையும் ஆதரித்து கருத்து கூறுவதில் தவறில்லை. 


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் ப.சிதம்பரம் பற்றி அவரது கருத்தை தெரிவித்துள்ளார் . அந்த கருத்தினால் கூட்டணிக்குள் எந்த ஒரு சலசலப்பும் இல்லை. காங்கிரஸ் குறித்து வைகோ விமர்சனம் செய்த போது, கூட்டணி கட்சித்தலைவர் என்ற முறையில் மு.க. ஸ்டாலின், இருவரிடமே தொலை பேசியில் பேசி சமரசம் செய்து வைத்தார். 

மேட்டூர் அணை தற்போது திறக்கப்பட்டு அதிகளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் தண்ணீர் நெருங்குவதற்கு முன்பே கடைமடை வரை வரத்து வாரிகளை சீர்செய்து இருக்கவேண்டும். ஆனால் அதை பராமரிக்க தமிழக அரசு தவறிவிட்டது . நான் திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஆகி 2 மாதங்கள் தான் ஆகிறது. திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். சிலர் விளம்பரத்திற்காக என்னை காணவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர். 

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News