செய்திகள்
பொங்கல் பரிசு (கோப்புப்படம்)

20-ந்தேதிக்கு பிறகு பொங்கல் பரிசு வழங்க ஏற்பாடு

Published On 2019-12-04 07:12 GMT   |   Update On 2019-12-04 07:12 GMT
தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1,000 ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை 20-ந்தேதிக்கு பிறகு வழங்க முடிவு செய்துள்ளனர்.
  • தமிழகத்தில் 2.05கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க நடவடிக்கை
  • பொங்கல் பொருட்களை ஒரு வாரத்திற்குள் கொள்முதல் செய்ய சுற்றறிக்கை
  • அநேகமாக வருகிற 20-ந் தேதிக்கு பிறகு பொங்கல் தொகுப்பு பரிசு, 1,000 ரூபாய் ரொக்கப்பணம் கிடைக்கும்
சென்னை:

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் 1,000 ரூபாய் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, 2 அடி நீள கரும்புதுண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் ரொக்கப்பணம் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் சென்னையில் பொங்கல் பரிசு திட்டத்தை தொடங்கி வைத்தார். அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இது வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

இதற்காக 2.05கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு உணவு மற்றும் கூட்டுறவுத்துறை ஏற்பாடு செய்து வருகிறது.

பொங்கல் பரிசு தொகுப்புக்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஒருவார காலத்திற்குள் கொள்முதல் செய்து தகுதி உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்குவது பற்றி பதிவாளர் சொன்ன பிறகே பொங்கல் தொகுப்பினை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

பொங்கல் பரிசு தொகுப்பிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஒரு வாரத்திற்குள் கொள்முதல் செய்து தகுதியுள்ள கார்டுதாரர்களுக்கு வழங்க தயார் நிலையில் வைக்க வேண்டும். பதிவாளரின் அறிவுரை பெற்ற பிறகு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி உணவுத்துறை அமைச்சர் காமராஜிடம் கேட்ட போது, ‘பொங்கல் பரிசு தொகுப்பு இன்னும் முழுமையாக கொள்முதல் செய்யப்படவில்லை. அனைத்து பொருட்களையும் கொள்முதல் செய்த பிறகே எப்போது வழங்குவது என்று முடிவு செய்யப்படும்.

எனவே பொங்கல் தொகுப்பு எப்போது வழங்கப்படும் என்பதை இப்போது சொல்ல இயலாது’ என்றார்.

இதுபற்றி உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

பொங்கல் பரிசு தொகுப்பு 2.05 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டி இருப்பதால் இதற்கு பொருட்களை கொள்முதல் செய்ய கால அவகாசம் தேவைப்படுகிறது. அவைகளை மொத்தமாக வாங்கி அதன்பிறகு பாக்கெட் போட வேண்டும்.

பச்சரிசி, சர்க்கரையை நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்து ரே‌ஷன் கடைகளுக்கு சப்ளை செய்யும். முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காயை செலவு உள்பட ரூ.40-க்கும், கரும்பு ரூ.15 என்றும் விலை நிர்ணயித்து ரே‌ஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்களே வாங்க கூட்டுறவுத் துறை அனுமதி அளித்துள்ளது.

கரும்பு சில இடங்களில் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. இவை எல்லாம் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிறகுதான் எந்த தேதியில் பொது மக்களுக்கு கொடுப்பது என்பது முடிவு செய்யப்படும்.

ஒரே நாளில் அனைத்து ரே‌ஷன் கார்டுகளுக்கும் கொடுத்துவிட முடியாது. தெரு வாரியாக ரே‌ஷன் கார்டுகள் பிரிக்கப்பட்டு கூட்டநெரிசல் இல்லாமல் பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

ரே‌ஷன் கடைகளில் கூடுதலாக ஊழியர்களை நியமித்து பொருட்களை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அநேகமாக வருகிற 20-ந் தேதிக்கு பிறகு பொங்கல் தொகுப்பு பரிசு மற்றும் 1,000 ரூபாய் ரொக்கப்பணம் வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

இதுகுறித்து முறையான அறிவிப்பு அந்தந்த ரே‌ஷன் கடைகளில் இருந்து வெளியிடப்படும். ரே‌ஷன் கடையின் அறிவிப்பு பலகையிலும் எப்போது பொங்கல் பணம் வழங்கப்படும் என்ற விவரம் மக்களுக்கு தெரியப்படுத்தப்படும். எனவே அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு கிடைக்கும். எனவே யாரும் கூட்ட நெரிசலை சந்திக்க வேண்டிய அவசியமில்லை.

இந்த திட்டத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தொடங்கி வைத்துள்ளதால் பொதுமக்களுக்கு வழங்குவதற்கு எந்த தடையும் இருக்காது.

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையரின் அனுமதியை பெற்று அதன் பிறகே பொங்கல் பரிசு தொகுப்பை முறைப்படி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Tags:    

Similar News