செய்திகள்
கபில் சிபல்

1½ ஆண்டுகளாக தலைவர் இல்லாமல் கட்சி எப்படி செயல்பட முடியும்?- கபில் சிபல் மீண்டும் கேள்வி

Published On 2020-11-22 08:27 GMT   |   Update On 2020-11-22 08:27 GMT
காங்கிரஸ் கட்சிக்கு 1½ ஆண்டுகளாக தலைவர் இல்லாமல் கட்சி எப்படி செயல்பட முடியும்? என்று கபில் சிபல் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்து ஏற்கனவே 23 மூத்த தலைவர்கள் சோனியாவுக்கு கடிதம் எழுதி இருந்தார்கள்.

இந்த நிலையில் பீகார் தோல்வி தொடர்பாக மூத்த தலைவர் கபில் சிபல் கடுமையாக விமர்சித்திருந்தார். அவருக்கு மற்ற தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கபில்சிபல் மீண்டும் கட்சியை குறை கூறி கருத்து தெரிவித்துள்ளார். டி.வி. ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறி இருப்பதாவது:-

கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகுவதாக அறிவித்ததற்கு பிறகு இன்றுவரை புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை.

1½ஆண்டு காலமாக தலைவர் இல்லாமல் கட்சி எப்படி செயல்பட முடியும்? கட்சி எந்த வழியில் செல்கிறது என்று தொண்டர்களுக்கு தெரியவில்லை.

உத்தரபிரதேசம் போன்ற சில மாநிலங்களில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் காங்கிரசால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. குஜராத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் ஏற்பட்ட 8 காலி இடங்களில் தேர்தல் நடந்தது. ஒன்றில் கூட வெற்றி பெற முடியவில்லை. 65 சதவீத ஓட்டுகள் பா.ஜனதாவுக்கு சென்றிருக்கின்றன.

மத்தியபிரதேசத்தில் 28 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததன் மூலம் இடைத்தேர்தல் நடந்தது. அங்கு 8 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது.

பா.ஜனதாவுடன் மோதக்கூடிய தகுதி உள்ள கட்சியாக காங்கிரஸ் கட்சி காட்டிக் கொள்ள முடியவில்லை. கட்சியின் நிலை தவறான இலக்கை நோக்கி செல்கிறது. அதில் ஏதாவது மாற்றம் ஏற்பட வேண்டும்.

இவ்வாறு கபில்சிபல் கூறினார்.

Tags:    

Similar News