உள்ளூர் செய்திகள்
தற்காலிக பஸ்நிலையம்

கோவையில் பொங்கல் கூட்டத்தை தவிர்க்க தற்காலிக பஸ் நிலையம்

Published On 2022-01-12 10:12 GMT   |   Update On 2022-01-12 10:12 GMT
நாளை மறுநாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
பீளமேடு:

நாளை மறுநாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் கோவையில் உள்ள நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் தங்கி பணியாற்றக்கூடியவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். 

இதற்காக நேற்று முதல் கோவை சிங்காநல்லூர், காந்திபுரம் உள்ளிட்ட பஸ் நிலையங்களில் இருந்து சேலம், திருப்பூர், தர்மபுரி, மதுரை, திருச்சி, சிவகங்கை, ராமேஸ்வரம், திருச்செந்தூர், நெல்லை, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 240 பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் பயணித்து பயணிகள் தங்கள் ஊர்களுக்கு செல்கின்றனர்.

நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பயணிகளின் வசதிக்காகவும், தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் கோவை கோட் டம் சார்பில் கொடிசியா வளாகத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி நடந்தது. 

தற்போது பணிகள் அனைத்தும் முடிந்து இன்று முதல் கோவை கொடிசியா தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து சேலம், திருச்சி, திருப்பூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டது. இதனால் இன்று காலை முதலே இந்த பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

சேலம், திருப்பூர், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக் கூடியவர்கள், தாங்கள் வேலை பார்த்து வரக் கூடிய இடங்களில் இருந்து பஸ்களில் பயணித்து கொடிசியா தற்காலிக பஸ் நிலையத்திற்கு வந்தனர். 

பின்னர் அங்கு தங்கள் ஊர்களுக்கு செல்ல தயாராக நின்ற பஸ்களில் ஏறி தங்கள் சொந்த ஊர்களுக்கு பயண மாகினர். முன்னதாக பஸ்களில் பயணிக்க வந்த பயணிகள் அனைவருக்கும் பஸ்சில் ஏறுவதற்கு முன்பு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. கிருமி நாசினியும் கொடுக்கப்பட்டு கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டனர். மேலும் பஸ்களில் முக கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை கடைபிடித்து பயணிகள் பயணமாகினர்.

பயணிகளின் வசதிக்காக இங்கு தற்காலிக நிழற்குடைகளும் அமைக்கப்பட்டிருந்தது. இதுதவிர குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட வசதிகள் என அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தது.

இதே போல சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, நெல்லை, தேனி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக் கூடிய பஸ்களிலும் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
Tags:    

Similar News