செய்திகள்
கோப்புப்படம்

மதம் மாறிய தாயின் இறுதி சடங்கிற்காக சண்டை போட்ட மகன்கள்

Published On 2020-11-22 07:04 GMT   |   Update On 2020-11-22 07:04 GMT
பால்கரில் மதம்மாறிய தாயின் இறுதி சடங்கிற்காக சண்டை போட்ட மகன்களால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு சமரசம் செய்து வைத்தனர்.
மும்பை:

பால்கர் மாவட்டம் வாடா தாலுகா அவன்டே கிராமத்தை சேர்ந்தவர் புலாய் தாபடே (வயது65). இவர் தனது கணவர் மகாது மற்றும் இளைய மகன் சுதனுடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியுள்ளார். இவரது மூத்த மகன் சுபாஷ் மதம் மாறாமல் இருந்து உள்ளார். இந்தநிலையில் கடந்த 18-ந் தேதி இரவு புலாய் தாபடே முதுமை காரணமாக உயிரிழந்தார்.

இதில் யாரும் எதிர்பாராத வகையில் தாயின் இறுதிச்சடங்கை செய்வதில் மகன்கள் இடையே சண்டை ஏற்பட்டது. மூத்த மகன் தான் பின்பற்றும் இந்து முறைப்படி தாயை தகனம் செய்ய வேண்டும் என்றார். இளைய மகனோ தாய் மதம் மாறிவிட்டதால் அவரை கிறிஸ்துவ முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என கூறினார்.

இதனால் அங்கு கிராம மக்கள் அதிகளவில் திரண்டு இருந்தனர். எனினும் 2 பேரும் தான் விரும்பும் முறைப்படியே தாயின் இறுதி சடங்கு நடைபெற வேண்டும் என பிடிவாதம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இதையறித்து வாடா போலீசார் 2 தரப்பு மற்றும் குடும்பத்தினரை அழைத்து பேசினர். பின்னர் தாயின் உடலை கிறிஸ்துவ முறைப்படியே அடக்கம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவரது உடல் வசாயில் உள்ள பச்சு தீவில் அடக்கம் செய்யப்பட்டது. போலீசார் சமரசம் செய்த போதும், மூத்த மகன் அவர்களது முடிவை முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் தனது தாயின் உருவ பொம்மைக்கு தியூட்டி இறுதி சடங்கை செய்தார்.
Tags:    

Similar News