செய்திகள்
மஞ்சளுடன் ஊடுபயிராக மிளகாய் பயிரிடப்பட்டிருக்கும் காட்சி.

பல்லடத்தில் மஞ்சளுடன் ஊடுபயிராக மிளகாய் சாகுபடி

Published On 2021-09-08 08:01 GMT   |   Update On 2021-09-08 08:01 GMT
பல்லடம் அருகே உள்ள காளிநாதம்பாளையத்தில் சுமார் 50 ஏக்கருக்கு மேல் மஞ்சள் சாகுபடி நடைபெற்று வருகிறது.
பல்லடம்:

பல்லடம், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மஞ்சள் பயிரிடப்படுகிறது. 10 மாத பயிரான மஞ்சள், கடந்த காலங்களில்  திருப்பூர் கோவை, ஈரோடு போன்ற மாவட்டங்களில் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. 

சில ஆண்டுகளுக்கு முன் குவிண்டால் ரூ.10 ஆயிரத்திற்கு மேல் விற்ற மஞ்சள் தற்போது ரூ.6 ஆயிரம், ரூ.7 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. இதனால் மஞ்சள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை என்ற நிலை உள்ளது. 

ஒரு ஏக்கர் மஞ்சள் பயிரிட விதை மஞ்சளுக்கு ரூ.30ஆயிரம், குப்பை உரம் மற்றும் உழவு கூலி ரூ.40ஆயிரம், மஞ்சள் வெட்டுக் கூலி ரூ.30ஆயிரம், மஞ்சளைப் "பாலிஸ்" செய்ய ரூ.20 ஆயிரம் என ரூ.1.30லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் வரை செலவாகிறது. 

இருந்தபோதிலும் சராசரியாக 2 முதல் 21/2 டன் வரை மஞ்சள் விளைச்சல் கொடுக்கிறது. நோய்த் தாக்குதல் இல்லாமல் தரமான மஞ்சளாக இருந்தால் மட்டுமே மஞ்சள் சாகுபடியில் போட்ட முதல் கிடைக்கும் என்ற நிலை நிலவுவதால் பெரும்பாலான விவசாயிகள் மஞ்சள் சாகுபடியை கைவிட்டு விட்டனர். 

இந்த நிலையில் பல்லடம் அருகே உள்ள காளிநாதம்பாளையத்தில் சுமார் 50 ஏக்கருக்கு மேல் மஞ்சள் சாகுபடி நடைபெற்று வருகிறது.

மஞ்சள் சாகுபடியில், உள்ள வருவாய் இழப்பை சரிசெய்ய ஊடுபயிராக மிளகாய் பயிரிடப்படுகிறது. நடப்பட்ட 60 நாட்கள் முதல் காப்புக்கு வரும் மிளகாய் ஏக்கருக்கு சுமார் 1 டன் வரை மகசூல் கிடைக்கும்.

மிளகாய் நாற்று, நடவு கூலி, அறுவடைக் கூலி, உள்ளிட்டவை போக ஏக்கருக்கு சுமார் ரூ.10 ஆயிரம் வருவாய் கிடைப்பதால் மஞ்சள் பயிருடன் ஊடுபயிராக மிளகாய் சாகுபடியில் ஈடுபட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News