செய்திகள்
கீழடியில் நடந்துவரும் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் சுடுமண்ணால் ஆன உறை கிணறு வெளிவந்துள்ளது.

கீழடி அகழாய்வில் வெளிவந்த சுடுமண் உறைகிணறு - நுட்பமான வடிவமைப்பை கண்டு மக்கள் ஆச்சரியம்

Published On 2021-07-11 05:16 GMT   |   Update On 2021-07-11 05:16 GMT
கீழடியில் நடந்துவரும் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் சுடுமண்ணால் ஆன உறை கிணறு வெளிவந்துள்ளது. அதில் உள்ள நுட்பமான வடிவமைப்பை கண்டு அப்பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் தற்போது 7-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன.

கீழடியில் மட்டுமின்றி கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. மண்ணுக்குள் புதைந்திருந்த பாசிமணிகள், சிறிய, பெரிய பானைகள், பெண்கள் காதில் அணியும் தங்க ஆபரணம் உள்பட ஏராளமான பழங்கால பொருட்கள் எடு்க்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கீழடியில் அகழாய்வில், அழகிய வேலைப்பாடுடன் கூடிய சுடுமண்ணால் ஆன உறை கிணறு தற்போது வெளிப்பட்டுள்ளது.

இந்த உறை கிணறு 3 அடுக்குகளை கொண்டதாக உள்ளது. இரும்பு சங்கிலி போன்ற நுட்பமான வடிவமைப்பு அதில் உள்ளது.

இந்த தகவல் அறிந்ததும் ஏராளமானோர் அங்கு வந்து ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர்.

பண்டைய காலத்திலேயே கீழடியில் வாழ்ந்த தமிழர்கள் நீர்மேலாண்மையில் சிறந்து விளங்கி இருக்கிறார்கள் என்பதற்கு இது போன்ற உறை கிணறுகள் முக்கிய ஆதாரமாக கிடைத்து வருகின்றன. ஆனால், 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை.

கடந்த ஆண்டு நடந்த 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியின் போது 38 அடுக்குகளை கொண்ட பெரிய உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News